ரூ. 230 கோடி மதிப்பில் நொய்யல் ஆறு சீரமைக்கும் பணி துவக்கம்

கோவை, திருப்பூர் பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உருவாகி 158 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்கக் கூடிய நொய்யல் ஆற்றினை சீரமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை ஏற்று 230 கோடி ரூபாய் மதிப்பில்  இப்பணி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்து.

இதற்கான பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். கோவை மட்டுமல்லாமல் இதனைச் சுற்றியுள்ள மற்றும் இதன் வழித்தடங்கள் கொண்ட மாவட்டங்களும் இதனைப் பெரிதும் நம்பியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறுகையில், இந்த பணிகள் 24 மாதத்திற்குள் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயனடையும், அதனுடன் நிலத்தடிநீர், அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்கள் போன்றவை ஆழப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகப்படியான தண்ணீரையும் தேக்கி வைத்துக்கொள்ள முடியும்.

ஏற்கெனவே அறிவித்ததைப்போல, நீர்நிலைப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் தவிர மற்ற ஆக்கிரமிப்புப் பகுதிகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடியிருப்புப் பகுதிகளுக்கும் மாற்றுப் பகுதிகள் அமைத்து அதனை அகற்றிட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த பணிகள் மேற்கொள்ளும் பொழுது நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் 100% மேற்கொள்ளப்படும். மேலும் இதில் வேறு கழிவுநீர் கலக்காத படியும், மற்ற கழிவுநீரையும் மழைநீரையும் பிரிப்பதற்கான முயற்சிகளும் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் மாநகராட்சி கழிவு நீர்களை சுத்திகரித்து விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டுசெல்லும் திட்டமும் உள்ளது. கூடிய விரைவில் இத்திட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.