‘புதிய இந்தியாவின் சிற்பி’ இராஜாராம் மோகன் ராய்

‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்ட இராஜாராம் மோகன் ராய், வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார்.

இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய இவர், உயர் படிப்புகளுக்காக ‘பாட்னா’ வுக்கு சென்று அங்கே தனது பதினைந்து வயதிற்குள் ஆங்கிலம், ஹிந்தி, பாரசீகம், அரபு, பிரெஞ்ச், லத்தீன், ஹீப்ரூ, கிரேக்கம் மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

இவரது தந்தை, ராம்காந்தோ ராய், ஒரு வைஷ்ணவர் மற்றும் இவரது தாய் தாரிணி சைவ மதப் பின்னணியில் இருந்து வந்தவர். இவரது தந்தை ஒரு ஆச்சாரமான இந்துமத பிராமணராக இருந்தாலும், இவர் சிலை வழிபாடு மற்றும் ஆச்சாரமான இந்துமத சடங்குகளுக்கு எதிராகவே செயல்பட்டார். மேலும் அனைத்து வகையான சமூக மதவெறி, பழைமை வாதம் மற்றும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து நின்றார். இதுவே இவருக்கும், இவரது தந்தைக்குமிடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. இந்த வேறுபாடுகளின் காரணமாக, இவர் வீட்டை விட்டு வெளியேறி இமயமலையில் வழியறியாமல் அலைந்துத் திரிந்து, திபெத் சென்றார்.

விசாலமான பயணம் மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பிய இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இது இவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு வாரணாசி சென்ற இவர் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்துமத தத்துவங்களை மிக ஆழமாகப் பயின்றார்.

1803ல் இவரது தந்தை இறந்தவிடவே இவர் மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார். பின்னர், கொல்கத்தாவில் உள்ள ஒரு வட்டிக்கடையில் பணியாற்றினார். 1809 முதல் 1814 வரை இவர் கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.

வசதி படைத்த வைதிக பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சமூகத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்து 1814ல், சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக ‘ஆத்மிய மக்களவை’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னர், பெண்கள் உரிமைக்காகவும், விதவைகள் மறுமண உரிமைக்காகவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும், பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார். இவர் அக்காலத்தில் பெண்களுக்குக் கட்டாயமாக இருந்த  உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட நடைமுறைகளைத் தீவிரமாக எதிர்த்தார்.

பெண்களுக்கானக் கட்டாயக் கல்வி முறைக்குப் பெரிதும் ஆதரவு காட்டிய இவர் 1828ல் ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை  நிறுவினார். பிரம்ம சமாஜ் மூலம் இவர் போலித்தனமான மத பாசாங்குகளை அம்பலப்படுத்தவும், இந்து மத சமூகத்தின் மீது அதிகரித்து வரும் கிறித்துவ செல்வாக்கை சரிபார்க்கவும் எண்ணினார். மேலும் இந்த அமைப்பின் மூலம், பலதார மணம், சாதி அமைப்பு, குழந்தை திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்கள் தனிமைப்பட்டிருப்பது, பர்தா முறை போன்ற சமூக முறைகேடுகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

‘கடவுளைத் தந்தையாகவும், மனித குலத்தில் சகோதரத்துவத்தை மேலோங்கச் செய்வதே’ பிரம்ம சமாஜின் தலையாயக் கொள்கையாகும். இந்த பிரம்ம சமாஜம், மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம் மற்றும் அனைத்து மதத்தவரிடையே உள்ள பாச உணர்வைத் தூண்டி, அவர்களின் பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு தூண்டுகோலாக இருந்தது.

ஆங்கில மொழியின் அவசியத்தை வலியுறுத்தி 1822 இல் இந்தியாவிலேயே முதன்முறையாக வங்காளத்தில் ஆங்கிலோ இந்தியப் பள்ளியை உருவாக்கி, ஆங்கிலக் கல்வியைத் துவக்கினார். இங்கே நவீன மேற்கத்திய கல்வி வழங்கப்பட்டது. இந்தியர்கள் வேதங்களை மட்டும் படிக்காமல் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகவியல் ஆகியவற்றையும் படிக்க வேண்டும் என்றார். இதன் காரணமாக அப்பள்ளியில் பல்வேறு பாடங்கள், விளையாட்டு மற்றும் கைத்தொழில் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன. ஆங்கிலத்தை அதிகம் நேசித்த போதும வங்க மொழியை இவர் மிகவும் விரும்பினார்.

இவர் ஒரு மிகச்சிறந்த பத்திரிக்கையாளரும் ஆவார். சம்பத் கெமுதி என்ற வங்க மொழி பத்திரிகையை நடத்தினார். ஆங்கிலம், ஹிந்தி, பாரசீகம் மற்றும் வங்க மொழியில் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது உருவச் சிலை பிரிஸ்டோலில் வைக்கப்பட்டுள்ளது.

1817 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ‘இந்து’ கல்லூரியைத் தொடங்கினார். அதில் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் உயர்கல்வி வழங்கப்பட்டது. அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார்.

நாட்டில் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகித்தார். ஒரு பெரும் கல்வியாளராகவும், சுயாதீன சிந்தனையாளராகவும் இருந்த இவர் ஆங்கிலம், அறிவியல், மேற்கத்திய மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தேர்ந்து விளங்கினார். இதனாலேயே, ‘ராஜா’ என்ற பட்டத்தை இவருக்கு முகலாயப் பேரரசர் வழங்கினார்.

‘மனச்சாட்சியும் நம்பிக்கையும் தூண்டும் வழியிலேயே செல்வதற்காக அந்தணனாய்ப் பிறந்த நான், பொதுமக்கள் மாத்திரமேயல்லாது, தற்கால ஒழுங்கால் லாபம் பெறும் என் உறவினர்கள் சிலருங்கூட என்னிடம் வெறுப்புக் கொண்டு என்னைப்பற்றி முறையிடவும், என்னை வசைமொழி கூறவும் பாத்திரமானேன். ஆனால் இத்துன்பங்கள் எவ்வளவு பெருகினாலும், நான் பொறுமையுடன் சகிக்கக் கூடும். ஏனெனில், எனது தாழ்மையான முயற்சிகள் இப்போதில்லாவிட்டாலும், எக்காலத்திலாவது நியாயமானவை எனக் கருதப்பட்டுப் பலராலும் நன்றியறிதலுடன் ஒப்புக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாக உண்டு‘ என வாழும்போதே கூறியவர்.

‘நாம் எண்ணுவதிலும் அதிகமாய், உலகத்தில் சாதுக்களும் பெரியோர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க நாமெல்லாம் மனம் வருந்துவதேன்? ஒருவனுடைய புகழ் நிலையானதா என்பதை நீ அறிய விரும்பினால், பெரிய நூல் நிலையத்திற்குப் போ. உண்மையான நிலைபேறென்பது, ஒருவனது மிகச் சிறந்த செயல்களேயாகும். ஆகையால், இராஜாராம் மோகன்ராய் என்னும் இம் மகாபுருஷனுடைய வரலாற்றைப் படித்து நாமும் நற்குணமும் நன் முயற்சியும் உடையவர்களாய், ஒன்றான பரமாத்துமாவை அன்புடன் உபாசித்து, அவரது கைங்கரியமாகிய நற்செயல்களைச் செய்து நமது வாழ்நாளைப் பயனுள்ளதாய்ச் செய்யும்படி முயலுவோமாக‘ என மாக்ஸ் முல்லர், பிரிஸ்டல் நகரத்தில் நடைபெற்ற இராஜாராம் மோகன்ராய் 50-வது நினைவு விழாவில் பேசினார்.

‘இயேசு நாதர் இறைவனல்லர். நம்மைப் போலவே அவரும் ஒரு மனிதர்; அவர் உபதேசங்கள் உயர்ந்தவை; அவற்றை ஏற்கலாம்; ஆனால், அவரைக் கடவுளாக வழிபடுவது தவறு’ என்று கூறி, கிறித்தவர்களை எதிர்த்துப் போராடினார். எனவே, இராஜாராம் மோகன் ராய் வாழ்க்கையே ஒரு போராட்ட வாழ்க்கையாக அமைந்தது. குடும்பப் போராட்டம்; உறவின் முறையாரோடு போராட்டம்; பிராமணர்களோடு போராட்டம், கிறித்தவப் பாதிரிமார்களோடு போராட்டம்; இந்து மதப் புலவர்களோடு கொள்கை ஆய்வுப் போராட்டம்; இறுதியாக ஆங்கிலேயே ஆட்சியாளர்களை எதிர்த்துப் பத்திரிகைச் சுதந்திரத்திற்காக நடத்தியப் போராட்ட வெற்றி.

இவ்வளவு போராட்டங்களையும் இவர் அறிவு ஒன்றை நம்பியே போராடி வெற்றி கண்டார். இருபது ஆண்டுகள் வரை மோகன் ராய் ஓயாமல் பத்திரிகைகளில் எழுதினார். இவர் எழுதிய நூல்களையும், ஆசிரியராக இருந்த பத்திரிகைகளையும் கணக்கிட்டால் ஒரு தனி மனிதர் செய்த காரியங்களா இவை? என்ற மலைப்பு உண்டாகும்.

வங்காள மொழியில் இவர் ‘ஒருவனே தேவன்’ கொள்கைக்கான பிரார்த்தனைப் பாடல்களை இயற்றினார். இவருடைய உரை நடை மிகவும் எளிமையானது. ஆனால், வலிமை மிக்கது. நவீன வங்காள உரைநடைக்கு இவரே வழிகாட்டி; அடிமைப்பட்டுக் கிடந்த இந்நாட்டில் தேசிய உணர்ச்சி ஊட்டி பத்திரிகைகளைத் தோற்றுவித்த முதல்வர் இவரே. “இந்திய தேசியப் பத்திரிகைகளின் தந்தை” என்றே இவர் இன்றும் போற்றப்படுகிறார்.

1833ல், அப்போது ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் மூலமாக ஒரு சட்டம் இயற்றி, அதன்வழியே சதி முறையை ஒழித்தார். தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை இராஜாராம் மோகன் ராய் மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.