வாசனை இழப்பும் கொரோனாவின் அரிய வகை அறிகுறியே

கொரோனாவிற்கு பல அறிகுறிகள் உள்ளன. இதில் புதிதாக வாசனை இழப்பு கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் மருத்துவர்கள் சிலரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு, ஒருசிலருக்கு மூச்சுத்திணறல் ஆகியவை உள்ளது. இந்நிலையில் வாசனையை அறியும் தன்மையை இழப்பதும் கரோனா நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் சுகாதார சேவைத் தலைவர் ஜெரோம் சாலமன் பேசுகையில், ”மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் ஒழுகுவது ஆகிய அறிகுறிகள் இல்லாமல், திடீரென வாசனையை நுகரும் தன்மையை இழந்தால் அது கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம். இது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகமாக ஏற்படுகிறது.

தற்பொழுது செய்த சோதனைகளின் அடிப்படையில், இதைக் கூறுகிறோம். இதையும் கொரோனா தொற்றுக்கான பொதுவான அறிகுறியாகக் கருத வேண்டும். அப்படிப்பட்ட மக்களைச் சுய தனிமைப்படுத்த வேண்டும். தற்போது கொரோனாவின் வழக்கமான அறிகுறிகள் இல்லாதவர்கள் இந்த அறிகுறியுடன் இருப்பது அதிகரித்து வருகிறது.

ருசியின் தன்மையை இழப்பது கூட, கொரோனாவின் அரிய வகை அறிகுறியே” என்று தெரிவித்துள்ளார். எனினும் மற்ற மருத்துவர்கள் இதுதொடர்பான ஆய்வு இன்னும் முழுமை அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.