திரையுலகில் நல்ல நண்பர்கள் கிடைத்தால் வெற்றி

ஒரு திரைப்படம் எடுத்து, அது சரியான நேரத்தில் வெளியாகி வெற்றி பெறும் தருணத்தில்தான் அதில் பணியாற்றியவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டும் சமூக அக்கறையுடனும் ஒரு இயக்குநர் இருக்க வேண்டும் என்று பலர் சொல்வார்கள். ஆனால் ஒரு இயக்குநர் தன் கதையை தத்ரூபமாக படமாக்க அதற்குத் தேவையான ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களைக் பார்த்து பார்த்து தேர்வு செய்வார். அப்படிப்பட்ட கலைஞர்களில் முக்கியமாக இருப்பது கலை இயக்குநர். ஒரு கதைக்குத் தேவையான தளத்தை அமைப்பது ஒரு ஆர்ட் டைரக்டருக்கு சவாலான விஷயம். சைக்கோ படத்துக்கு ஆர்ட் டைரக்ட் செய்த க்ரவ்ஃபர்ட், தனது வாழ்க்கை சம்பவங்களைப் பற்றி இங்கே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

‘சினிமாத் துறையில் என் பயணம் இருக்கும் என்று நான் நினைத்ததுகூட கிடையாது. என் சொந்த ஊர் திருவண்ணாமலை பக்கத்தில் போளூர். சிறு வயதில் இருந்து படம் வரைவது பிடிக்கும். அப்போது முதலே சுற்றியிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் கலை நயத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். நமது வாழ்க்கையே ஒரு அனுபவம் என்று என் பள்ளிக் காலங்களில் புரிந்தது. ஒரு ஓவியருக்கு மக்களின் உணர்வையும் சமூக அக்கறை இருக்க வேண்டும். மனிதர்கள் ஒவ்வொருவரும் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். மனிதனின் முகத்தில் இருக்கும் வண்ணம், கலை நயத்தை ஒரு ஓவியர் நன்றாக புரிந்திருக்க வேண்டும். இதை மேலும் நன்றாகத் தெரிந்துகொள்ள ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்தேன்.

அங்கு, இதுவரை பார்த்த உலகத்தை வேறு ஒரு கலை நயத்துடன் பார்க்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன். விருப்பப்பட்டு சேர்ந்த துறை என்பதால் ஒவ்வொரு நாளும் சந்தோஷமான அனுபவம். என்னால் எந்த அளவுக்கு ஓவியம் வரைய முடியும் என்பதை அறிந்துகொள்ள, ஒரு அழகான பெண் முகத்தை வரைந்தேன். அந்த ஓவியத்துக்கு விருதும் கிடைத்தது. அந்த ஓவியத்தில் வரைந்த பெண்தான், என் வருங்கால மனைவி என்று அப்போது எனக்குத் தெரியாது. காலமும், நேரமும் எங்களை ஒன்று சேர்த்தது. ஒரு ஓவியனுக்கு எதார்த்தம் கலந்த சந்தோஷம்தான், அவனை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்ல பாதை அமைத்துக் கொடுக்கும்.

காலம் கடந்தது. சினிமா உலகம் அழைத்தது. திறமைக்கேற்றபடி, மும்பை, சென்னை என்று மாற்றி மாற்றி சில படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது, பசங்க படத்தில்

பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் பாண்டியராஜ், எனது நல்ல நண்பர். நான் திறமையை வெளிபடுத்த, சுதந்திரமாக பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். பிறகு யூனியன் கார்டு வாங்கிக் கொடுத்தவர் இயக்குநர் சசிக்குமார். இந்தப் படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து பல படங்கள் பணியாற்றினேன். சினிமா உலகில் நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்கள் கிடைத்தால் நம் வெற்றிப் பயணம் தொடரும்.

நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நாசர், எனக்கு ஒரு தனிப் பாதை அமைத்துக் கொடுத்தார். அது என் திறமையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல மிகவும் உதவியாக இருந்தது. சினிமா உலகில் பணியாற்றும் ஒவ்வொருவரும் நினைக்கக் கூடிய விஷயம் ஒரு மாஸ்டர் பீஸ் படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதுதான். அப்போது எனக்கு மிஷ்கின் சார் நட்பு கிடைத்தது. அப்போது அவர் ‘சைக்கோ என்று ஒரு படம் பண்ணப் போகிறேன். நீ அந்தப் படத்துக்கு ஆர்ட் டைரக்ட் செய்ய வேண்டும்’ என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டார். பிறகு படத்தின் முழுக் கதையை கூறினார். பொதுவாக, இயக்குநர்கள் தங்களது திரைக்கதைக்கு ஏற்றபடி படத்தின் செட் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் என்னிடம் முழுப் பொறுப்பை ஒப்படைத்தார் இயக்குநர் மிஷ்கின். கதையைப் புரிந்துகொண்டு புதிய செட் அமைக்க வேண்டும் என்று இரவு பகலாக யோசித்து சைக்கோ படத்துக்கு செட் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். அப்போது ஒரு வார்த்தைகூட இப்படி இருக்க வேண்டும் என்று மிஷ்கின் அவர்கள் என்னிடம் சொல்லவில்லை.

சுதந்திரமாக பணியாற்ற எனக்கு நேரம் இருந்தது. செட் வேலை முடிந்தபிறகு மிஷ்கின் சார் வந்து பார்த்துவிட்டு, கட்டி அணைத்து பாராடினார். அந்த ஒரு பாராட்டு போதும் என் வாழ்க்கை பயணம் இனி எப்போதும் வெற்றியை நோக்கிப் பயணிக்கும். அவரது துப்பறிவாளன் 2 படத்தில் பணி செய்துள்ளேன். இனிமேல் ஒவ்வொரு படத்தின் கதை அம்சத்தைப் புரிந்து செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். என் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த நடிகர் நாசர், இயக்குநர்கள் பாண்டிய ராஜ், மிஷ்கின் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்’ என்றார்.