சிறந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறையில் சிறப்பாக செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும்,  கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு  மாணவ, மாணவியர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதினையும், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளையும், மாணவ, மாணவியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும்,  கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு  மாணவ மாணவியர்களுக்கு  2019 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருது இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

பள்ளியின் கட்டமைப்பு, கல்வி மற்றும் கல்வி இணைப்பு செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட சுண்டாக்கமுத்தூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான காசோலையும், காந்திமாநகர், அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75,000க்கான காசோலையும், பெருந்தலைவர் காமராஜர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட 18 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 12  அரசுப்பள்ளிகளை சார்ந்த பத்தாம் வகுப்பு பயிலும்  15 மாணவ, மாணவியர்களுக்கும் தலா ரூ.10,000- காசோலையையும், மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு 15 மாணவ, மாணவியர்களுக்கு  தலா ரூ.20,000க்கான காசோலையும், பெருந்தலைவர் காமராஜர் விருதும், வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.