என்.ஜி.பி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19–வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் பாவை அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையேற்றுச் சிறப்புரை வழங்கினார். அவர் தமது உரையில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும் வெற்றியாளர்கள் என்று கூறினார். பட்டம் பெற்ற மாணவர்கள் ஆராய்ச்சிக்கல்வியில் சிறந்தவர்களாகவும், தொழில் முனைவோராகவும், கல்வியாளர்களாகவும் சமூகத்திற்குத் தொண்டாற்றுபவர்களாகவும் திகழ வேண்டுமென்று வாழ்த்தினார். புது டில்லி, அல்ட்ரா சோனிக் சொசைட்டி இந்தியாவின்  இயக்குநர் பேராசிரியர் விக்ரம் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், மாணவர்கள் தமது வாழ்க்கையில் உயர தன்னம்பிக்கையைக் கைவிடாது கடின உழைப்பால் முன்னேற்றமடைய வேண்டும் என்றார்.

மேலும், பொறியியல் கல்வி தற்போதைய வாழ்க்கைச் சூழலில் அவசியம் என்றாலும் கலை மற்றும் அறிவியல் கல்விப் படிப்புகள் வாழ்வில் முன்னேற்றமடைய முக்கிய உந்து சக்தியாக இருக்கிறது என்றார். இப்பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகின்ற மாணவர்களை விடவும் அவர்களுடைய பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியும் பெருமித உணர்வும் அடைந்திருப்பதை உணர்ந்து பெருமையடைகிறேன் என்றார். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு இப்பட்டமானது முதல் படிக்கல்லாகத் திகழ்கிறது என்றார். இப்பட்டத்தினைக் கொண்டு வாழ்க்கையில் எட்ட இயலாத உயரத்தை அடைவதற்கு எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். இக்கல்லூரியில் பட்டம் பெற்ற அனைவருமே வெற்றியாளர்கள் என்று கூறினார்.

டாக்டர் என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் அருண் பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் இயக்குநர் முத்துசாமி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ஓ.டி.புவனேஷ்வரன் மற்றும் டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வே.ராஜேந்திரன் முதன்மையுரை வழங்கினார். அவர் தமது உரையில், பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் வாழ்க்கையில் புதிய உயரத்தினைத் தொட்டு  எட்ட முடியாத இலக்கினை அடைவதற்குத் தமது வாழ்த்துக்களை மனமாரத் தெரிவித்தார். மேலும், பட்டம் பெற்ற ஒவ்வொரு மாணவனும், தனக்கான தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு அதை வைத்து உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  இவ்விழாவில் இளங்கலை மற்றும் முதுகலையைச் சார்ந்த 1880 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த நிகழ்வில் புல முதன்மையர்கள், இயக்குனர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.