விழிப்புணர்வு போதும், செயலில் இறங்குவோம்!

‘தாமதமாக’ வந்தாலும் தென்மேற்கு பருவமழை ‘தரமாக’ வந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கின்றன. தமிழகம் முழுவதும் ஓரளவு நல்ல மழைப்பொழிவு இருக்கிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதுவும் மேற்கு மலைத்தொடர் பகுதிகளில் நல்ல மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்புகள் வருகின்றன.

இதெல்லாம் சரி, ஆனால் இவ்வளவு தண்ணீரை இயற்கை அள்ளி, அள்ளி வழங்குகிறதே, இதை நாம் எவ்வாறு சேமித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் எண்ணிப் பார்க்கிற மாதிரி தெரியவில்லை. கண் முன்னால் கிடைக்கின்ற தண்ணீரை சேமிக்காமல் விட்டுவிட்டு, பிறகு அந்த மாநிலம் தரவில்லை, இந்த மாநிலம் தரவில்லை, நீதிமன்றம், வழக்கு என்று ஒரு பக்கம் அரசியல் கட்சிகளும், அரசுகளும் அலைவது; இன்னொரு பக்கம் மக்கள் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் தண்ணீருக்காக நாயாய், பேயாய் அலைவது, சாலை மறியல் செய்வது, பிறகு ஓய்ந்துபோய் கடன் வாங்கியாவது கேன் தண்ணீர் வாங்கி குடிப்பது என்பதுதான் நடைமுறையில் உள்ளது.

ஒவ்வொரு முறையும் ஆண்டு முழுவதும் குறட்டைவிட்டு தூங்குவதும், மழை வந்து கொட்டும் நேரத்தில் சேமிக்க முடியாமல்போய் தண்ணீர் பஞ்சத்தில் அடிபட்டு லபோ திபோ வென்று கதறுவதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. இனி மேலாவது இதை மாற்ற முயற்சி செய்வோம்.

இந்த கொட்டும் மழையில் நனையும்போது பல நேரங்களில் நாம் கோடையில் பட்ட சிரமங்களை, தண்ணீர்ப் பஞ்சத்தை வசதியாக மறந்து விடுகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பது என்பது எப்போதும் நமது தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியாக மாறிக்கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரம் இதற்கு நல்ல உதாரணம். அந்த நகரத்தின் மக்கள் அனைவரும் கையில் கேனுடன், பாத்திரத்துடன் வரிசையில் நின்ற காட்சி அனைவருக்கும் தெரியும். இந்தியாவிலும் அந்த நிலை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தேசிய நீர் வள ஆணையம் அறிக்கை தந்துள்ளது. தென்னகத்தின் பெருநகரமான பெங்களூர்தான் அடுத்து தண்ணீர் இன்றி தத்தளிக்கப் போகும் நகரம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளாக புயல், மழை, வெள்ளம் என்று பாதிக்கப்பட்ட சீர்மிகு சென்னை நகரம், இந்த ஆண்டு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீருக்காக கையேந்தியதை மறந்து விடக்கூடாது.

இந்த இரண்டு பெரும் நகரங்களிலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தும், திரும்பிய பக்கம் எல்லாம் கிணறுகளுடனும் பசுமையாக காட்சி தந்தவைதான். இன்று நமது வரைமுறையற்றப் பயன்பாடும், மோசமான நீர் நிர்வாகமும் சேர்ந்து தற்போதைய நிலையை உருவாக்கி இருக்கின்றன. இது நாடு முழுவதற்கும் ஒரு எச்சரிக்கை ஆகும்.

எனவே இந்த மழை நீர் சேமிப்பு என்பது வெற்று முழக்கம், கருத்துக் கூறுதல், விழிப்புணர்வு செய்தி, படம் என்று இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இதில் அரசாங்கம் மட்டுமே எதையும் சாதித்துவிட முடியாது. அதைப்போலவே மக்களும் தனியாக இறங்கி முழுமையாக செயல்பட்டுவிட முடியாது. தனி நபர், நிறுவனம், அரசாங்கம் என்று அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணத்தை இயற்கை உருவாக்கித் தந்துள்ளது.

தனி நபர்கள் தண்ணீரை பயன்படுத்தும் விதம் குறித்தும், பயன்பாட்டின் அளவு குறித்தும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு கட்டிடத்திலும் அது வீடு, கடை, மண்டபம், மருத்துவமனை, கல்லூரி என்று எவ்வித வேறுபாடும் இல்லாமல் அந்தந்த கட்டுமானத்துக்கேற்ப மழைநீர் சேமிக்கப்பட வேண்டும். இதைத் தனிநபர்களும், நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் மட்டும் இல்லாமல் தரிசு நிலம், பொது நிலம் என எல்லா நிலப்பகுதிகளும் வரப்பு கட்டுவது போன்ற செயல்பாடுகள் மூலம் கிடைக்கின்ற மழைநீரை சேமிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதைப்போலவே குளம், குட்டை போன்ற பொது இடங்களில் மழைநீர் சேமிப்பதை அரசு மட்டும் இன்றி தனிநபர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் இணைந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.

ஊருக்கு பொதுவான குளங்கள் ஒரு குறிப்பிட்ட துறையின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்றாலும் அந்தத் துறை மட்டுமே அதற்கு பொறுப்பானது அல்ல. அதில் மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே அரசு துறை சார்ந்த அதிகாரிகளோடு, அந்தந்த பகுதிகளில் உள்ள நீரியல் நிபுணர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இளைஞர், மாணவர் குழுக்கள், தனியார் மற்றும் அரசு சாரா சேவை நிறுவனங்கள், தனிநபர்கள், இணைந்து களத்தில் இறங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுக்கும் தேவையான மழைநீர் சேகரிப்பு பணிகளை திட்டமிட்டு, பட்டியலிட்டு செயல்படுத்த முன்வர வேண்டும்.

ஒவ்வொரு முறையும் குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதுபோல வானிலை அறிக்கையில் கனமழை எச்சரிக்கை வந்தவுடன் களத்தில் இறங்குவது சரியாகாது. அதுவும் விழிப்புணர்வு சார்ந்து செயல்படுவதை விடுத்து சரியான சமயத்தில் நேரடியாக செயல்திட்டத்துடன் களத்தில் இறங்க வேண்டும். நீராதாரங்கள் என்பவை நமது சொத்தும், பொறுப்பும் மட்டுமல்ல, இனிவரும் எதிர்காலத்  தலைமுறைகளுக்கும் உரிமையானது; அதை ஒழுங்காக அவர்களுக்குத்  தர வேண்டியது நமது கடமை என்பதை உணர வேண்டும்.

இனி நமக்குத் தேவை வெற்று முழக்கங்களோ, விழிப்புணர்வோ அல்ல, களத்தில் இறங்கி செயல்படுவதுதான் இன்றைய தேவை. அதுவும் அரசாங்கத்துடன் இணைந்து, சொல்லப்போனால் ஒரு சாலை அல்லது பாலம் கட்ட அரசும், தனியாரும் இணைந்து செயல்படுவதுபோல நீராதாரங்களுக்காகவும் செயல்பட வேண்டும். குளங்கள், வாய்க்கால்கள் போன்றவற்றை நிர்வகிப்பதில் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் ஒத்துழைக்கும்போது அதனால் கிடைக்கும் பலனும் மிகப்பெரியதாக இருக்கும். நீடித்ததாகவும், நிலையானதாகவும் இருக்கும். நமக்கென்ன என்ற அலட்சியம் இருக்காது;  கூடவே நம்முடையது என்ற அக்கறையும் இருக்கும். இதனைப்  புரிந்து கொண்டு ஒவ்வொரு தனிநபரும், நிறுவனங்களும், அரசாங்கமும் இணைந்து செயல்படுவது வீட்டுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.