எது நல்வாழ்வு?

இவ்வுலகில் இப்போதைய தேவை ‘செல்வம் சேர்ப்பது’ மட்டுமல்ல, ‘நல்வாழ்வும்’ தான். செல்வம் என்பது நல்வாழ்வை உருவாக்கிக் கொள்வதற்கான பல கருவிகளில் ஒன்று. அதை வைத்து, வெளிசூழ்நிலைகளைத்தான் நாம் இனிமையாய் அமைத்துக் கொள்ள முடியுமே தவிர்த்து, அதுவே எல்லாம் அல்ல. ஆனால் இன்று, அதையே மதம் போல் பலரும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம் என்பது நல்வாழ்விற்கான ஒரு வழி மட்டுமே. பணம் மட்டுமே நல்வாழ்வு அல்ல. தேவையே இன்றி அதற்கு முக்கிய இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ‘செல்வம் நல்லதா? கெட்டதா?’ செல்வம் என்பது நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. அது நாம் உருவாக்கிக் கொண்ட ஒரு சாதனம். அவ்வளவுதான்.

இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு யாருமே செல்வத்திற்கு ஆசைப்படவில்லை. இது நம்பமுடியாததாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் விரும்புவது பணத்தை அல்ல. அவர்கள் விரும்புவது நல்வாழ்வைத்தான்.

அதை அடைவதற்கான ஒரு கருவியாக பணம் இருக்கிறது, அவ்வளவுதான். எல்லோருக்குமே அவர்கள் வாழ்க்கை இனிமையாய் அமைய வேண்டும் என்பதுதான் ஆசை. இந்த இனிமை என்பது ஐந்து வழிகளில் நடக்கலாம். உங்கள் உடல் இனிமையாய் இருந்தால், அதை சுகம் என்போம். உங்கள் மனம் இனிமையாய் இருந்தால், அதை அமைதி என்போம். இதுவே மனம் மிக இனிமையாய் இருந்தால், அதை மகிழ்ச்சி என்போம். உங்கள் உணர்வுகள் இனிமை யாய் இருந்தால், அது அன்பு. அதுவே மிகவும் இனிமையாய் இருந்தால், அது கருணை. உங்கள் உயிர்சக்தி இனிமையாய் இருந்தால், அது பேரானந்தம். அதுவே மிகவும் இனிமையாய் இருந்தால், அது பரவசம். உங்கள் சூழ்நிலைகள் இனிமையாய் இருந்தால், அது வெற்றி. உங்களுக்கு இவ்வளவு தானே வேண்டும்?

‘இல்லை. இல்லை. எனக்கு சொர்க்கத்திற்குப் போகவேண்டும்’. உங்களுக்கு ஏன் சொர்க்கத்திற்குப் போகவேண்டும்? ஏனெனில் இதுவரை நீங்கள் கேட்ட கதைகள் எல்லாமே சொர்க்கத்தை மிக இனிமையான இடமாக வர்ணித்திருக்கின்றன. ஆக எல்லா நேரத்திலும் நீங்கள் விரும்புவது இனிமைதான்.

ஆனால் பணம் கொண்டு நீங்கள் வெளிச¢சூழ்நிலையில் மட்டுமே இனிமையை உருவாக்கிக் கொள்ளமுடியும், உள்சூழ்நிலையில் அல்ல. உங்க ளிடம் நிறைய பணம் இருந்தால், நீங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கலாம். ஆனால் உங்கள் உடல், மனம், உணர்வுகள், சக்தி நிலை இனிமையாய் இல்லையென்றால், எந்த நட்சத்திர ஹோட்டலில் தங்கினாலும் நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியுமா? முடியாது. ஆனால் அதுவே, இந்த நான்கும் இனிமையாய் இருந்தால், மரத்தடி நிழலில்கூட நீங்கள் ஆனந்தமாக இருக்க முடியும்.

‘அப்படியென்றால், நான் பணம் வைத்துக்கொள்ளக் கூடாதா?’ அப்படிச் சொல்லவில்லை. ஆனால் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நான்கும் இனிமையாய் இருந்து, உங்களிடம் பணமும் இருந்தால், உங்களின் வெளிச¢சூழ்நிலையையும் நீங்கள் இனிமையாய் அமைத்துக் கொள்ளலாம்.

ஆன்ம¤கம் என்பது உங்கள் உள்நிலை சம்பந்தப்பட்டது. நீங்கள் வெளியில் செய்யும் செயல்களுக்கும் உள்நிலையில் இருக்கும் நிலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வெளியில் எவ்வித செயல்களைச் செய்து கொண்டிருந்தாலும், உள் நிலையை ஒரு குறிப்பிட்ட வகை யில் வைத்துக் கொள்ளலாம்.

உள்நிலையை எப்படி வை த்துக் கொள்வது என்று உங்க ளுக்குப் புரிந்துவிட்டால், வெளிச் செயல்களை சூழ்நிலை க்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.