ஈரோடு: ஊர் சொல்லும் கதை

கொங்கு நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று ஈரோடு ஆகும். பழைமைக்கு பழைமையும், புதுமைக்கு புதுமையுமாக அமைந்த நகரம். இரண்டாயிரம் ஆண்டு பழைமையான தொல்லியல் ஆதாரங்களும் இங்கு உண்டு. உலகத்தரம் வாய்ந்த நவீன ஜவுளித் தொழில் வளர்ச்சியும் இங்கு உண்டு. தந்தை பெரியார் என்னும் ஒரு மாபெரும் சமூக விஞ்ஞானியை, பகுத்தறிவு கொண்ட சீர்திருத்தவாதியை இந்த உலகிற்கு அளித்த பெருமையும் ஈரோடு நகரத்துக்கு உண்டு.

காவிரியின் தென்கரையில் இந்த ஈரோடு நகரம் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஈரோடு, நிர்வாக வசதிக்காக 1979 இல் பெரியார் மாவட்டம் என்ற பெயரில் பிரிக்கப்பட்டு ஈரோடு நகரம் பெரியார் மாவட்டத்தின் தலைநகரமாக மாறியது. ஈரோடு என்றாலே மஞ்சள் என்று நினைவு வரும் அளவுக்கு இங்கு மஞ்சள் உற்பத்தி புகழ்பெற்றது. மஞ்சள் மட்டுமல்லாது பால் பொருட்கள், ஜவுளித்துறை, நெசவு, எண்ணெய் வித்துகள் என்று பல துறைகளிலும் தொழில் சார்ந்த முன்னேற்றமடைந்த பகுதியாக ஈரோடு காணப்படுகிறது.

குறிப்பாக இங்கு நடைபெறும் ஜவுளி வர்த்தகம் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா முழுவதும் இருந்து வியாபாரிகள் ஈரோட்டுக்கு வந்து ஜவுளித்துறை சார்ந்த உற்பத்திப்பொருட்களை வாங்கி வணிகம் செய்வது இப்பகுதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும். அதற்கு சிகரம் வைத்தாற்போல டெக்ஸ்வேலி என்ற ஜவுளித்துறைக்கான ஒரு ஜவுளிப்பூங்கா ஒன்று இந்திய அரசின் ஒத்துழைப்போடு ஈரோடு தொழில் முனைவோர் சிலரால் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மேற்கு தமிழகத்தின் முக்கிய நகரமான ஈரோடுக்கு ஈரோடு என்ற பெயர் எப்படி வந்தது?

ஈரோட்டின் புவியியல் அமைப்பின்படி பார்த்தால் இந்த நகரம் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் ஓடை என்ற இரண்டு ஓடைகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியாக அமைந்துள்ளது. எனவே ஈரோடைகளுக்கு இடையே அமைந்த ஊர் என்பதே ஈரோடையூர் என்பதே மருவி ஈரோடு என்ற பெயர் வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சின்னஞ்சிறு ஊராக உருவாகி வளர்ந்த ஈரோடு இன்று நன்கு வளர்ச்சி பெற்று இருக்கும் நிலையில் ஈரோடு என்ற பெயர் வரக் காரணமாக இருந்த இரு நீரோடைகளும் இருந்த இடம் தெரியாமல் களையிழந்து கழிவு நீரோடு காட்சி தருகின்றன.

– சி.ஆர். இளங்கோவன்.

வரலாற்று ஆய்வாளர்.