உள்நாட்டுத் தயாரிப்புகளில் சிறக்கும் இந்தியா                   

நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ‘ரோஜ்கார் மேளா’ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நாடு முழுவதும் நடைபெற்ற ‘ரோஜ்கார் மேளா’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகக் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருமானவரித்துறை, தபால்துறை மற்றும் கேந்திர வித்யாலயா ஆகியவற்றில் வேலைவாய்ப்பு பெற்ற மொத்தம் 42 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

‘ரோஜ்கார் மேளா’ நிகழ்ச்சியில் பாரத பிரதமர் ஆற்றிய உரை காணொளிகாட்சி மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.முன்னதாக, இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பேசுகையில்,’இன்று பணி ஆணைகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதப் பிரதமர் கடந்த ஆண்டு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துவிட்டு, அடுத்த ஒரு வருடத்திற்குள் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறினார். அதனை நிறைவேற்றும் விதமாக இப்போது வரை 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக ஒரே வருடத்தில் இவ்வளவு அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதோடு, விரைவில் 10 லட்சம் எனும் இலக்கை அடைய உள்ளோம். மேலும் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், வேலை கொடுப்பவர்களாகவும் உருவாகும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தலைமை அதிகாரிகள் பெரும்பாலானோர் 30 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்களாக உள்ளனர். அவர்களது திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்கில் இந்தியா திட்டம் செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும் திறன்மிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கவும் செயல்பட்டு வருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக சந்திராயன்3 வெற்றி பயணத்தில் ஏராளமான ஸ்டார்ட் அப் பங்களித்தன.

குறிப்பாக, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் சந்திராயன் வெற்றிக்குப் பங்களித்தனர். இதற்கு முன்பு ராணுவ தளவாட தயாரிப்புகள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இப்போது டிபன்ஸ் காரிடாராக உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகம் அறிவிக்கப்பட்டு, ராணுவ தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இது போன்று தொழில் வளர்ச்சியிலும் தேசத்தின், வளர்ச்சியிலும் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் கதி சக்தி திட்டத்தின் கீழ் உள்நாட்டின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வெறும் ஆறு மணி நேரத்தில் பயணம் செய்ய முடிகிறது. வந்தே பாரத் ரயில் முழுவதுமே உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக உள்நாட்டுப் பொருட்களையும் கைவினைப் பொருட்களையும் வாங்குமாறு பிரதமர் பொதுமக்கள் மத்தியில் சிறப்பான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களைப் பயன்படுத்தும் போது தான் சுயச்சார்பு பாரதத்தை நம்மால் அடைய முடியும்.

இந்தியாவின் 100வது சுதந்திர தின ஆண்டில் நாட்டை வல்லரசு நாடாக உருவாக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த திட்டங்களை முழுவதுமாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வது இன்று பணி நியமனம் ஆணைகள் பெற்ற இளைஞர்கள் கையில் தான் உள்ளது’ எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வருமானவரித்துறை, தபால் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் பணி நியமன ஆணைகள் பெரும் இளைஞர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.