பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்கள் இருக்க வேண்டும் – சிறப்பு விருந்தினர் கலைச்செல்வி பேச்சு

பி. எஸ். ஜி கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் கலைச்செல்வி, இனிவரும் நாட்களில் மாணவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பி. எஸ். ஜி கலை கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பி. எஸ். ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பிருந்தா வரவற்புரை வழங்கி ஆண்டறிக்கையை வாசித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கலைச்செல்வி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில்; இன்றைய தினம் மாணவர்களின் வாழ்க்கையில் மிக சிறந்த நாள். சிறப்புமிக்க பி. எஸ். ஜி நிறுவனங்களில் கல்வி கற்றதற்கு மாணவர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவில் சந்திராயன்- 3 போன்ற பல்வேறு சாதனைகளினால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உயர்தோங்கி நிற்கிறது.

அதனை ஒவ்வொரு மாணவர்களும் கருத்தில் கொண்டு தங்களது திறமைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும். திறமையான இந்தியாவில் அனைத்து மாணவர்களும் தங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பதை சரியாக பயன்படுத்தி இனிவரும் நாட்களில் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும்., என்று மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர் கலைச்செல்வி பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு 14 முனைவர் பட்டம், 870 முதுகலை பட்டங்கள் , 3121 இளநிலை பட்டங்கள் மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற 68 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவின் இறுதியில் கல்லூரி துணை முதல்வர் அங்குராஜ் நன்றியுரை வழங்கினார்.