கோவையில் குழிக்குள் சிக்கிய அரசு பேருந்து – பயணிகள் அதிர்ச்சி

கோவை போத்தனூர் பகுதியில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படதாக சாலையில் சிக்கிய அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள், குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை போத்தனூர் பகுதி ரயில்வே மண்டபம் அருகில் குழாய்கள் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட சாலை சரிவர மண்ணை கொண்டு மூடாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அவ்வழியாக போத்தனூரில் இருந்து துடியலூர் செல்லும் எண் 4 அரசு பேருந்து சரியாக மூடப்படாமல் இருந்த குழியில் சிக்கியது. பேருந்தின் முன்புறத்தின் ஒரு சக்கரம் அரைவாசிக்கும் மேல் சிக்கி நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பேருந்திற்கு மாற்றி விடப்பட்டனர்.பின்னர் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பேருந்துக் குழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுத்தவுடன் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.