கோவையில் தேனாறு ஓடாவிட்டாலும் பரவாயில்லை வெள்ள ஆறு ஓடக்கூடாது

எம்.எல்.ஏ. அம்மன் அர்சுணன் பேட்டி

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன், கோவை மாநகராட்சி பகுதிகளில் வாய்கால்களை தூர்வார வேண்டும் எனவும், சாலை பணிகளை விரைந்து முடித்து சாலைகளை மேம்படுத்த வேண்டும் என மனு அளித்தார்.

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன் கூறுகையில், கோவை மாநகராட்சியில் 100 வார்டிலும் சரியான சாலை வசதி இல்லை. 24 மணி நேர குடிநீருக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் உள்ளது. இதனால் 92வது வார்டு மைல்க்கல் பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் அதில் அரசு நகர பேருந்து ஒன்று சிக்கி கொண்டது. அதேபோல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். இது குறித்த மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளரும் இது குறித்து ஆவணம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால்தான் கோவை மக்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும். கோவையில் எந்த பகுதியிலும் மழைநீர் வடிகாலில் தண்ணீர் போக வழி இல்லாமல் அடைத்து கொண்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 152 திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது, அந்தப் பணிகளை எல்லாம் மேற்கொண்டு இருந்தால் தற்பொழுது இந்த பிரச்சனைகள் வந்திருக்காது. குறிப்பாக கணபதி ராஜவாய்க்கால் பயங்கரமாக அடைத்துள்ளது, சாதாரண மழை பெய்தாலே அங்கு வெள்ளம் ஏற்படுகிறது. அப்பகுதியில் 38 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டும், தற்பொழுது வரை பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துடன் கேள்வி எழுப்பினால் அது சர்வேயில் இல்லை என கூறுகிறார்கள். குறிப்பாக ராஜ வாய்க்காலை தூர்வார வேண்டும், சாலைகளை மேம்படுத்த வேண்டும். தேனாறும் பாலாறும் ஓடாவிட்டாலும் பரவாயில்லை வெள்ள ஆறு ஓட விடாமல் இருந்தால் அதுவே போதும் என தெரிவித்தார்.