கே.பி.ஆர். கல்லூரி சார்பில் சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே.பி.ஆர்.  பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், சி20 இந்தியா, ஐ எக்ஸ்ப்ளோர் பவுன்டேசன் மற்றும் கோவை மேற்கு ரோட்டரி இணைந்து “சிவில் சமூக அமைப்புகளுக்கான தொழில்நுட்பம் மற்றும் சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது.

இந்நிகழ்வை, கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ராமசாமி துவக்கி வைத்து உரையாற்றினார், மேலும் அமிர்தா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியின் டீன் நவ சுப்ரமணியம், மற்றும் கோவை மேற்கு ரோட்டரி தலைவர் துரை நாராயணசாமி, உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியானது, சிவில் சமூக அமைப்புகளுக்கு தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் சொத்துகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில்நுட்பத்தால் இயங்கும் இன்றைய உலகில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

இதில், கோயம்புத்தூர் மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக சேவை அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்வை ஏற்படுத்திய சைபர் பாதுகாப்பு நிபுணரான ரத்தின பாலாஜி, பங்கேற்பாளர்களுக்கு இணைய அபாயங்களைக் குறைப்பதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் உத்திகள் பற்றி தெரிவித்தார்.