சிறு,குறு நூற்பாலைகள் வரும் 15 ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம்

மூலப்பொருள் விலையேற்றம், மின்கட்டண உயர்வு  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்தில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு,குறு நூற்பாலைகள் வரும் 15 ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம் மற்றும் நூல்விற்பனை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.

கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடத்தில் ,  சிறு,குறு நூற்பாலைகள்  கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நூற்பாலை தொழில் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், சிறு,குறு நூற்பாலைகளுக்கு கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவு  பிரச்சினைகள் வந்ததில்லை எனவும் தெரிவித்தனர்.

58000 ரூபாய்க்கு  ஒரு கண்டி பஞ்சு வாங்கினால், அதில்  ஒரு கிலோவிற்கு  235 ரூபாய் வரை  செலவாகின்றது எனவும், ஒரு கிலோ பஞ்சிற்கு 40 ரூபாய் வரை நஷ்டம் வருகின்றது எனவும், தினமும் ஒரு லட்சம் வரை நூற்பாலை  உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது எனவும் தெரிவித்தனர்.

3 மாதம் இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவில் பஞ்சாலைகளே இருக்காது என தெரிவித்த அவர்கள், மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக , வெளிநாட்டு ஆர்டர்கள்  இழந்து விட்டோம் எனவும் ,  28 சதவீதம் ஏற்றுமதி குறைந்து விட்டது எனவும்,  ஏற்றுமதி குறைந்ததே சிறு,குறு நூற்பாலைகள் பாதிக்கப்பட  காரணம் எனவும் தெரிவித்தனர்.

மத்திய அரசு  “ஒரு இந்தியா ஒரு பாலிசி” என கொண்டு வந்து வெளிநாடுகளுடன் போட்டியிட வேண்டும் எனவும், மாநிலங்களுக்குள் போட்டி தேவையில்லை எனவும்,ஏற்றுமதியில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்,  இல்லையெனில் ஐவுளித்துறையை இந்தியா இழந்துவிடும் சூழல் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

மத்திய அரசு இறக்குமதி  வரியை ரத்து செய்ய வேண்டும், வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும்,பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,  ஒரு ஹெக்டேருக்கு 550 கிலோவில் இருந்து 450 கிலோவாக பருத்தி உற்பத்தி குறைந்து இருக்கின்றது, இதை அதிகரிக்க வேண்டும் எனவும்,தமிழக அரசு பொறுத்த வரை மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும், வருடம் 6 சதவீதம் என உயர்த்தாமல் செலவுகளை பொறுத்து கட்டணம் உயர்த்த வேண்டும்,மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும்,  இந்த கோரிக்கைகளை முன் வைத்து வரும் சனிக்கிழமை காலையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறு,குறு நூற்பாலைகள்  உற்பத்தி நிறுத்தம் மற்றும் நூல் விற்பனை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது எனவும் நூற்பாலை நிர்வாகிகள் தெரவித்தனர்.

தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட சிறு,குறு நூற்பாலைகள் இந்த உற்பத்தி நிறுத்ததில் பங்கேற்பதாகவும், அனைத்து நூற்பாலைகளிலும் சேர்த்து ஒரு கோடி கதிர்கள் நிறுத்தப்படும் எனவும், இதன் மூலம்  35 லட்சம் கிலோ பருத்தி பயன்பாடு நிறுத்தப்படுவதுடன், நாள் ஒன்றுக்கு 85 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் எனவும்,2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 10 லட்சம. தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழக்கின்றனர் எனவும் சிறு,குறு நூற்பாலை உரிமையாளர்கள் தெழிவித்தனர். இந்த உற்பத்தி நிறுத்தம் மூலம் 4.5 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் பாதிக்கப்படும் எனவும்,1.5 கோடி யூனிட் மின்சாரம் பயன்பாடு இருக்காது,  இதன் மூலம் 11 கோடி  இழப்பு ஏற்படும் எனவும்  மத்திய மாநில அரசுகள் சிறு,குறு நூற்பாலைகளின் கோரிக்கையினை ஏற்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும் சிறு,குறு நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே OE மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , தற்போது சிறு குறு நூற்பாலைகளும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தினை துவங்க இருப்பது குறிப்பிடதக்கது.