சிறுவாணி அணை 12 அடியாக உயர்வு

கோவை மாநகரில் 26 வார்டுகள், 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் குறைந்தது.

ஜூன் மாதத்தில் அணையின் நீர்மட்டம் ஒரு அடிக்கு குறைவாக சரிந்தது. இதனால் சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் இருந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கடந்த சில நாட்களாக பலத்த மழையும் பெய்தது. இதனால் அணைக்கு செல்லும் முத்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளம் அப்படியே அணைக்கு வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர தொடங்கியது. மெல்ல மெல்ல உயர தொடங்கிய சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 12 அடியாக உயர்ந்தது. வரும் நாட்களில் இன்னும் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளதால், அங்கிருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடியில் இருந்து 7 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் வரை பருவமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.