போலீசார் பொதுமக்களிடம் மனுக்களை நேரில் வாங்க முடிவு –  தமிழக டிஜிபி அறிவிப்பு

அரசு விடுமுறை நாட்களைத் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமக்கள், காவலர்கள் தங்கள் மனுக்களை காலை 11.30 மணிக்கு என்னிடம் நேரில் அளிக்கலாம் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டிஜிபியாக பணிபுரிந்து வந்த சைலேந்திரபாபு பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவி ஏற்றுள்ளார். அவர் புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தாமே மக்களிடம் நேரில் மனுக்களை பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டிஜிபி அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காவல்துறை தலைமை இயக்குநர், பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை, திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்றநாட்களில் தினமும் காலை 11.30 மணிக்கு நேரில் சந்தித்து மனுக்களைப் பெறுகிறார்.

டிஜிபி அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் டிஜிபியைச் சந்தித்து மக்கள் தங்கள் மனுக்களை அளிக்கலாம். இதைப் பயன்படுத்தி காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.