அறிவிப்பு பலகை வைக்க கோரி கோவை விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, அரசு பணிகள் நடக்கும் இடங்களில் ஒப்பந்ததாரரின் விவரத்தை பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை, கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுவுடன் வந்திருந்தனர். கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, கிராமப்புற ஊராட்சி மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ மூலம் பல்வேறு பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதவிர பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பல்வேறு துறைகளும் நிதி ஒதுக்கி வருகின்றன.

எனவே, மேற்கண்ட பணிகள் நடக்கும் பகுதிகளில் ஒப்பந்ததாரர் பெயர், வேலையின் விவரம், நிதி ஓதுக்கீடு ஆகியவை பற்றி பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பர பலகை வைக்க வேண்டும். தரமான முறையில் பணிகள் நடக்க வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் கமிஷன் கொடுப்பதால் பணிகளை முழுமையாக செய்வதில் சிரமம் உள்ளது. எனவே பணிகள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். போக்குவரத்து சாலை அமைக்கும்போது இருபுறமும் மழைநீர், கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.

அரசாங்க திட்டங்களின்போது தரமான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்துவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் எழுத்துபூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.