கோத்தகிரியில் தேசிய புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலுசாமி அறிவுறுத்தலின் பேரில் தேசிய புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார பொது சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

சுகாதார ஆய்வாளர்கள் பிரேம்குமார், அசோக்குமார், குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை நர்சுகள், அரசு பள்ளி மாணவ மாணவிகள், தனியார் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். இதனை கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் கிருஷ்ணா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியானது கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் தொடங்கி காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், மார்க்கெட், கடைவீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது. பஸ்நிலையத்தில் வைத்து புகையிலை மற்றும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இறுதியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் குமாரசாமி பேரணியில் கலந்து கொண்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நன்றி கூறினார்.