ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், உடல்- மனம்- ஆத்மா என்ற தலைப்பில் ஆரோக்ய கருத்தரங்கம் நடைபெற்றது

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பரிவு கோயம்புத்தூர் சீனியர் சிட்டிசன்ஸ் அமைப்பு இணைந்து ‘உடல் மனம் ஆத்மா” நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனோதத்துவ நிபுணர் டாக்டர் சி.சந்தானம், மருத்துவர் கு.சிவராமன் மற்றும்
எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

“மனச பாத்துக்க நல்லபடி” என்கிற தலைப்பின் கீழ் மனோதத்துவ நிபுணர் டாக்டர் சி. சந்தானம் பேசினார். “இந்தியாவின் சராசரி ஆயுள் காலம் என்பது 68.9 வருடங்கள்.
60 வயதிற்கு மேல் நல்லதொரு வாழ்க்கை வாழ ஏராளமான வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது என்பது முக்கியம். இளமையில் இவற்றையெல்லாம் செய்யத் தவறிவிட்டோமோ அவற்றை முதுமையிலும் செய்யலாம். உடல்ரீதியான
பொறுப்புகளை குறைத்துக்கொண்டு நம் அனுபவங்களைக் கொண்டு குடும்பத்தினருக்கு உதவலாம். கோயம்புத்தூரில் 98 வயதில் நாணம்மா என்னும் பெண்மணி இப்பொழுதும் யோகப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரையில் அவரிடம் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஃபாஜாசிங் என்னும் 92 வயது பெரியவர் இரண்டு முறை மாரத்தான் ஓட்டத்தில் ஓடி சாதனை புரிந்திருக்கிறார். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதையும் அனுபவித்து செய்ய வேண்டும். நகைச்சுவை உணர்வு மனிதநேயம் ஆகியவை நம்மை மேம்படுத்தும். சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளுடன் நம் நாளை தொடங்கி தொடர்ந்து கற்றுக் கொள்பவர்களாகவே நாம் இருக்க வேண்டும்” என்றார்.

“செய்க தவம்” என்னும் தலைப்பில் பேசிய இந்திரா செளந்தர்ராஜன், உயிரின் ஒடுக்கம் தவம் ஆகும். ஆத்ம தத்துவம் என்பது மிகவும் அலாதியானது .ஆத்மா என்றால் என்ன என்பதற்கு உயிர் என்று பொருள் கொள்ளலாம். ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று சொல்பவர்கள் உயிரை ஒரு காற்றாக பாவிக்கின்றனர். மரணம் ஒரு மாற்றம். நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப நாம் திரும்பத் திரும்ப பிறக்கிறோம் . உயிராகவும் பிறக்க வைத்தாய் இறைவா என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுகிறார் . நாம் ஆத்மாவைத் தெரிந்து கொள்ள முதலில் உடம்பையும் மனதையும் தெரிந்துகொள்ளவேண்டும் .உடல் என்பது நான் இல்லை. சரித்திரங்கள் உள்ளவற்றை உள்ளவாறு சொல்வது. புறத்தைப் பார்ப்பதை விடுத்து அகத்தை பார்க்கும் வழியாக தவமே இருக்கிறது .அந்த தவம் குரு வழி நிகழ்கிறது அவர் நம் தன்மைக்கேற்ப நம்மை வழிநடத்துவார். எல்லாவற்றுக்கும் முன்னர் சப்த பிரபஞ்சம் படைக்கப் பட்டது . பிரம்மாவிற்கும் முன்னர் படைக்கப்பட்ட அந்த சப்த பிரபஞ்சம் நம் மனம் என்னும் வடிவில் இருக்கிறது . ஆக மனதை அடக்க வேண்டும் . ஓம் என்று சொல்லிக் கொண்டு தியானம் செய்யும் போது மனம் அடங்கி வெற்றிடம் உருவாகிறது .அந்த வெற்றிடத்தில் சுடரொளி போல் தெரியும் ஆத்ம சுடர் அழிவற்றது. அதுதான் உன் ஜீவாத்மா .அது பரமாத்மாவை அடைய முற்படுகிறது” என்றார்.

வலிமை, வலிமை என்று பாடுவோம் என்கிற தலைப்பில் உரை வழங்கிய மருத்துவர் கு.சிவராமன் , இது வரை இந்தியாவில் 58 லட்சத்து 17 ஆயிரம் மரணங்கள், சர்க்கரை மற்றும் இதய நோய் போன்ற தொற்றல்லாத நோய்களால் நிகழ்ந்துள்ளன என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அதில் தமிழகத்தில் 23% இறப்புகள் நிகழ்ந்துள்ளது.
நம் மரபு நமக்கு கொடுத்திருந்த உணவறிவு அறிவியல் பூர்வமாக உணர்ந்து பக்குவப்பட்டது. இந்த இருபத்தைந்து வருடங்களில் மாறிய உணவும் சுற்றுச் சூழலும் அறிவியல் சூழலும் வணிகத்தால் சூழப்பட்டு நம்மை வலுவிழக்கச் செய்துவிட்டது. பேறுகாலத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் என்னென்ன உணவு கொடுக்கவேண்டும் என்பதை நம் மரபு சொல்லி இருக்கிறது. இன்று 800 கிராமில் பிறக்கும் குழந்தையையும் காப்பாற்றி விட முடியும். ஆனால்
எடை குறைவாக இருக்கும் குழந்தைக்கு கணையமும் சிறிய அளவில் சிறுநீரகத்திலுள்ள நியூட்ரான்களின் அளவும் குறைவாக இருக்கிறது. குழந்தைகளின் உணவு விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதே இன்றைய குழந்தைகள் நோஞ்சான்கள் ஆக இருப்பதற்கு காரணம். மருத்துவர்களிடம் போய் சத்தான டானிக் வேண்டும் என்கிறார்கள்.அவசியமில்லாமல் கொடுக்கப்படும் மருந்துகளில் முதலிடம் டானிக்கிற்குத் தான். நம் கவனக்குறைவினால் கணிக்கப்படாத காச நோய்களுக்கு நம் குழந்தைகள் ஆளாகிறார்கள். இந்தியாவில்தான் கணிக்கப்படாத காசநோய் விகிதம் அதிகமாக உள்ளது. துரித உணவுகளில் இருக்கும் ரசாயனங்களுக்கு நம் குழந்தைகள் அடிமையாகிறார்கள். அதிலிருந்து நம் குழந்தைகளை நாம் காப்பாற்ற வேண்டியதாயிருக்கிறது.
என்றார். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.