தேசிய அளவிலான புவிசார் வரைபட போட்டியில், இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மீண்டும் அசத்தல்!

இந்திய அரசின் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் ‘IITB-FOSSEE’ மற்றும் ‘தமிழக அரசின் நாளைய திறன்’ இணைந்து நடத்திய மேப்பதான் (Mapathon) என்ற தேசிய அளவிலான கூட்டு இந்திய ஜியோஸ்பேஷியல் மேப்பிங் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.  இந்த நிகழ்வானது பல்வேறு துறை சார்த்த மாணவர்களை “ஒன்றாக இந்தியாவை வரைபடமாக்குவோம்!” என ஊக்கப்படுத்துகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற மேப்பத்தான் 2023ல் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து 222 மாணவர்கள் 67 அணிகளாக பங்கேற்றனர். இதில் 2 அணியினர் வின்னர் மற்றும் 14 அணியினர் குறிப்பிடத்தக்க பங்கேற்பாளர் என தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொடர்ந்து இந்த ஆண்டும் மேப்பதான் போட்டியில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மேப்பதான் நிகழ்வில், 263 மாணவர்கள் கலந்துகொண்டனர். 68 மாணவர்கள் சாம்பியன், வின்னர், குறிப்பிடத்தக்க பங்கேற்பாளர் என அனைத்துவிதமான துறைகளிலும் தேர்வு  செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் நுட்பம், தொழில் முனைவு மற்றும் பல்வேறு துறைகளில் தனிப்பெரும் முத்திரையை பதித்து வரும் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியானது மேலும் ஒரு மணிமகுடம் சூட்டியுள்ளது.

கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், இணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. ஜெயா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் கே.கருணாகரன், பங்கேற்ற மாணவர்களையும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.கௌசல்யாதேவியையும் பாராட்டி மேலும் பல சாதனை புரிய வாழ்த்தினார்.