செந்தில் பாலாஜிக்கு ‘செக்’ வைக்கும் மூத்த அமைச்சர்கள்!

மதிமுக – திமுக – அதிமுக – அமமுக – திமுக என பல கட்சிகளில் பயணித்திருந்தாலும், இருந்த இடத்தில் எல்லாம் ‘ஸ்மார்ட்டான’ அரசியல்வாதி என்று பெயர் எடுத்திருக்கிறார் இந்த ‘கரூர் பார்ட்டி’.

ஒரே சட்டப்பேரவைத் தொகுதியில் இரட்டை இலையிலும், அதன்பின் நடந்த இடைத்தேர்தலில் உதயசூரியனிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாமர்த்தியக்காரர் செந்தில்பாலாஜி. அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, சமீபத்தில் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களுக்குமான செய்தித் தீனி இவர்தான்.

திமுகவில் 2018-ம் ஆண்டு இறுதியில் சேர்ந்த செந்தில்பாலாஜிக்கு, மாவட்ட செயலாளர் பதவியில் தொடங்கி, 2021-ல் தேர்தல் வாய்ப்பு, அதன்பின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை என்ற உயரிய பதவி கிடைத்தது. திமுகவின் மூத்த அமைச்சர்களின் மூச்சுக்காற்றை உஷ்ணமாக்கும் அளவுக்கு முதல்வர், சின்னவர், ‘மாப்பிள்ளை சார்’என்று மூவருக்கும் நம்பிக்கையானவராக இருப்பதுதான், இந்த உயர்வுக்கு காரணம்.

கடந்த காலத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ‘குட் புக்’கில் இடம்பெற்று, உச்சத்தில் இருந்து, அதன்பின் ஒரே நேரத்தில் அமைச்சர் பதவி, கட்சிப் பதவியை இழந்த வரலாறும் இவருக்கு உண்டு.  அத்தகைய நிலை இவருக்கு மீண்டும் ஏற்படுமா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் தற்போது எழுந்துள்ள கேள்வி.

இதற்கு அடிப்படையாய் – கடந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்திற்கு பணம் பெற்றது தொடர்பான வழக்கு; விழுப்புரம், செங்கல்பட்டில் நடந்த விஷச்சாராய சாவுகள்; டாஸ்மாக் கடைகளில், பார்களில், ‘கரூர் கம்பெனி’என்ற பெயரில் நடந்த வசூல் வேட்டை; கரூரில் செந்தில்பாலாஜியின் தம்பி உள்ளிட்டோர் தொடர்புடைய வீடுகளில் 8 நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை போன்ற 4 விவகாரங்கள் முன் நிற்கின்றன.

இவற்றின் மூலம் ‘டார்கெட்’செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு இறங்குமுகம் ஏற்படுமா என்பது குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகள், அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக ஆக்கப்பட்டு, அங்கு உள்ளாட்சித் தேர்தலில் பெருவெற்றியை பெற்றுக் கொடுத்தது, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பணி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதியைக் கொண்டு அடுத்தடுத்து பிரம்மாண்ட விழாக்கள் எடுத்தது என செந்தில்பாலாஜி தனது அதிரடிகளால் கட்சித் தலைமையின் ‘குட் புக்’கில் தொடர்கிறார்.

இது அவரது ‘பாசிட்டிவ்’ பக்கங்கள் என்றால், அவரது வசமிருந்த டாஸ்மாக் மூலம் நடந்த வசூல் வேட்டை, களம் பல கண்ட மூத்த திமுகவினரையே கலங்க வைத்துள்ளது. டாஸ்மாக்கின் மொத்த நிர்வாகமும், ‘கரூர் கம்பெனி’ வசம் சென்றது, ‘பி.எப்., (பார்ட்டி பண்ட்) என்ற பெயரில் நடத்தப்பட்ட வசூல் வேட்டை – கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், மதுப்பிரியர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்தபோது, விஷச்சாரய மரணமும், வருமானவரித் துறை சோதனையும் நடந்துள்ளது. குறைந்தபட்சம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையையாவது, செந்தில்பாலாஜியிடம் இருந்து பறித்து, வேறு ஒருவருக்குக் கொடுக்க வேண்டும் என்பது மூத்த அமைச்சர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றனர்.

அதேநேரம் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவித்த தகவல்கள், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை, பார்களில் வசூல் இவையெல்லாம், கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து நடந்து வருபவை. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் நிதி, அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்குத்தான் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த கணக்கு வழக்குகள், கட்சித் தலைமைக்கும் தெரியும்.

கட்சி நிர்வாகிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் தொகைக்கு, ஒரு அமைச்சரை (செந்தில்பாலாஜி)  மட்டும் பலிகடா ஆக்குவதில்,  ‘சீனியர்கள்’ சிலரின் உள்குத்து அரசியல் உள்ளது. அதனை முதல்வரும் புரிந்துகொண்டு இருக்கிறார்.

ஒருகாலத்தில் மின்வெட்டு காரணமாகவே திமுக ஆட்சியை இழந்த நிலையில், இந்த கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாத நிர்வாகத்தை அளிப்பது, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியது போன்ற செயல்பாடுகள் குறித்து அமைச்சரைப் பாராட்ட யாருக்கும் மனமில்லை.

வருமானவரி சோதனையைப் பொறுத்தவரை, வெளிநாட்டுப் பயணம் முடித்துவந்த முதல்வர் ஸ்டாலின், ஒரு வரியில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். பணி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவு வரும் முன்பே, ‘கட்சிக்கு என்னால் இழுக்கு என்றால், நான் உடனே பதவி விலகி விடுவேன்’என முதல்வரிடம் அமைச்சர் தெரிவித்துவிட்டார்.

‘அதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று முதல்வர் தெம்பு கொடுத்துத்தான் அப்போதே அனுப்பியிருக்கிறார். எனவே, பொழுது போகாமல் கிளப்பப்படும் வதந்திகள், அமைச்சரை எந்த விதத்திலும் பாதிக்காது என்றனர்.

வருமானவரிச் சோதனையின் பின்னணி!

டாஸ்மாக்கில் இருந்து ‘பார்ட்டி பண்ட்’என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகை, 3 மாதத்திற்கு ஒருமுறை கட்சி நிர்வாகிகளுக்கு, ‘கரூர் கம்பெனி’மூலம் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக பொங்கலின்போது இந்தத் தொகை சென்றடைந்த நிலையில், மே மாத இறுதியில் அடுத்தகட்ட பட்டுவாடா நடக்க நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெரும் தொகை கரூரில் பதுக்கப்படும் என்ற தகவலின் அடிப்படையிலேயே, கரூரைக் குறிவைத்து வருமானவரித் துறை களமிறங்கியது என்ற தகவலும் திமுக வட்டாரத்தில் உலாவுகிறது.

இந்த விஷயம் தெரியுமா?

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலின்போது, செந்தில்பாலாஜி ஏற்கெனவே வெற்றி பெற்ற அரவக்குறிச்சி தொகுதியை ஒதுக்க ஸ்டாலின் முடிவு செய்தார். ஆனால் செந்தில்பாலாஜி, கரூர் தனக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு, ‘ ஏற்கெனவே, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் நீங்க நிறைய செலவு செஞ்சிட்டீங்க. கரூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிற்கும்போது, அவரை எதிர்த்து நின்றால், நிறைய செலவு செய்ய வேண்டி வரும். அதனால்தான், பாதுகாப்பான அரவக்குறிச்சியில் உங்களை நிற்கச் சொல்கிறேன்’என்று ஸ்டாலின் பரிவோடு தெரிவித்துள்ளார். ஆனால் அதன்பின், செந்தில்பாலாஜி விருப்பப்படியே கரூர் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த நிகழ்வைச் சொன்ன கரூர் திமுக நிர்வாகி ஒருவர், தேர்தலுக்கு முன்பே தளபதியின் இதயத்தில் இடம்பிடித்தவர் செந்தில்பாலாஜி என்பதை, அவர் மீது வெறுப்பு காட்டும் திமுகவினர் தெரிந்துகொள்ளட்டும் என்றார்.

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறுகையில்

அமைச்சர் செந்தில்பாலாஜியைப் பொறுத்தவரை திமுக பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்தில் அவர் பலமாக இருப்பதே அவருக்கு அரணாக அமைந்துள்ளது. திமுகவுக்கு கொங்கு மண்டலம் என்பது சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. காரணம், திமுக கருத்தில் ரீதியாக பின்தங்கியுள்ள பகுதி. 1957, 1962 என திமுக முதலில் இரண்டு தேர்தலை சந்திக்கும்போது இந்தப் பகுதியில் பலவீனமாக இருந்தது. இதன் காரணமாக அதன்பிறகு எப்பொழுதுமே திமுக அங்கு பலம் பெற முடியவில்லை. கலைஞர் கருணாநிதி காலத்திலும் இதே நிலை தொடர்ந்து. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அம்மையார் ஆட்சியைப் பிடித்ததற்கும் 2021 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பலம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவராக வந்ததற்கும் மிக முக்கியக் காரணம் கொங்கு மண்டலம்தான். இந்த இரு தேர்தல்களிலும் கொங்கு மண்டலத்தில் உள்ள 64 தொகுதிகளில் 40 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வென்றுள்ளது.