பார்க் பொறியியல் கல்லூரியில் கலை விழா நம்பிக்கையும், விடா முயற்சியும்தான் எனக்கு கிடைத்த வெற்றி. – நடிகர் சூரி பேச்சு

கோவை கணியுரில் உள்ள பார்க் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் “ஜீரோஜி” என்ற கலை விழா  இரண்டு நாட்கள் நடந்தது. விழாவில், 22 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பீட்ப்ளீட்ஸ், கோரஸ், ஷார்ட்ஜில்லா, ஸ்னோபோக்ராபி, வெர்பாசிட்டி உள்ளிட்ட 30 போட்டிகள் நடந்தன.

நிறைவு விழாவில், பார்க் கல்வி குழுமுத்தின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பின்னணி பாடகர்கள் வருஷா, நிவாஸ், ஸ்ரீநிஷா மற்றும் நடிகர் சூரி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் நடிகர் சூரி பேசுகையில், நாம தான் மக்களில் ஒருவர். விடுதலை படத்தை முடித்துவிட்டு வந்துள்ளேன்; பெருமையாக இருக்கிறது. வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து விடுதலை வரை, இறைவனும், ரசிகர்களும் தான் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர்.

பரோட்டா சூரினு பேரு, தற்செயலாக கிடைத்தது. வேறு ஒரு நடிகருக்கு வந்தது. வேறு வழியின்றி, நான் நடிக்க வேண்டியதாகி விட்டது. எனக்கு மாறியதால், டைரக்டர், காலை முதல் டீ குடிக்க விடவில்லை. 50 பரோட்டா சாப்பிட்டதா சீன்ல வரும்; நான் சாப்பிட்டது 13 பரோட்டா தான். வெண்ணிலா கபடிக்குழு படம் வெற்றியை தொடர்ந்து, எனது குழந்தைக்கு வெண்ணிலா பெயர் வைத்தேன்.

சீமராஜா படத்தில், ஒரே காமெடி சீனுக்காக சிக்ஸ் பேக் கஷ்டப்பட்டு செய்தேன். 11 மாதங்கள் வைத்திருந்தேன். டைரக்டர் சொன்னதால் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதானால் தான் இந்த அளவுக்கு வர முடிந்தது. விடுதலை படத்தில் காமெடியிலிருந்து ஹீராவாக மாறியிருக்கிறேன். வெற்றிமாறன் அளித்த இந்த வாய்ப்பு, வாழ்க்கையில் மிகப்பெரிய தாங்க முடியாத மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இந்த படத்திற்காக 2, 3 ஆண்டுகள் காத்திருக்கிறேன். வருவாய் இழப்பு, பிற படங்களுக்கான வாய்ப்புகள் இழந்தாலும், இதில் கிடைத்த வெற்றி அவற்றை விட எனது அடையாளமாக இருந்தது. வெற்றிமாறன் படங்கள் அனைத்தும் ஹிட் ஆகவே இருக்கின்றன. விடுதலைப்படத்தில் குமரேசன் என்ற கதாநாயகன் பாத்திரம், எனக்குள் வந்துவிட்டது. விரைவில் விடுதலை இரண்டாம் பாகம் அக்டோபரில் வரும்.

விடுதலை படம் பார்த்து விட்டு பல நடிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், இரவு 11.00 மணிக்கு போனில் பாராட்டியது எனக்கு ரெம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

மாணவர்கள் எல்லோரும் பொறுப்பாக உள்ளனர். இவர்களுக்கு எனது அறிவுரை எதுவும் இல்லை. இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வயது, ஆகையால் மற்றவர்களுக்கு இடையுறு இல்லாமல் மனதுக்கு நிறைவாக மகிழ்ச்சியாக இருங்கள். படிக்கிற நேரத்தில் படித்துவிட்டால் கல்லூரியிலும் சரி வெளியிலியேயும் சரி மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் படிக்கலைனா, இங்க மட்டும் ஜாலியா இருக்கும்; வெளியே காலியாக இருக்கும்.

மாணவர்களை அனைவரும் கல்லூரி முடிந்த பின் நீங்கள் பிறந்த நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் உங்களால் முடிந்த ஏதாவது நல்லது செய்யுங்கள்.

எனக்கு கல்லூரி வாழ்க்கை அனுபவம் கிடையாது. பள்ளிக்கு போனதும் குறைவுதான். சினிமாவை நோக்கிய என் பயணத்தில் நான் பார்க்காத வேலை இல்லை, கஷ்டம் இல்லை. ஊருக்கே சென்று விடுவோம் என்று என்னும் போது எனக்குள் இருந்த 2 சதம் நம்பிக்கையும், விடா முயற்சியும்தான் இப்போது எனக்கு கிடைத்த வெற்றி. ஆகையால் உங்களுக்கு எது சரினு தோணுதோ அதை செய்யுங்கள். உங்களால் முடியாவிட்டால், யாராலும் முடியாது என நம்புங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.