+2 தேர்வு முடிவுகளில்..   கோவை பிடித்த இடம் என்ன? 

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவை மாவட்டம் கடந்த ஆண்டு பிடித்த 4வது இடத்தை இந்த ஆண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3ந் தேதி வரை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட 363 பள்ளிகளை சேர்ந்த 15,794 மாணவர்கள் 18, 533 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 327 பேர் பிளஸ்2 தேர்வவை எழுதினர்.

இதனிடையே தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில் கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 15,794 மாணவர்களில் 15,228 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .

தேர்வு எழுதிய 18,533 மாணவிகளில் 18,265 மாணவிகள் என மொத்தமாக கோவை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 493 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 சதவீதமும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.55 என மொத்தமாக 97.57 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தின் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4வது இடத்தை பிடித்தது.

கடந்த ஆண்டு 96.21 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று கோவை மாவட்டம் 4வது இடத்தை பிடித்தது இருந்தது. தற்போது வெளியான தேர்வு முடிவில் 97.57 சதவீதம் பெற்று மீண்டும் 4வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.