டாக்டர் என்.ஜி.பி கல்லூரி மாணவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி

நம் பலம், பலவீனத்தை அறிவதே வெற்றிக்கான மந்திரம்!

– பாலசுப்ரமணியம் நடராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி), புதுதில்லி

“ஒரு மாவட்டத்தின் ஆட்சியராக இருக்கும் பொழுது, நலிவடைந்த மக்களுக்கு உதவி, அவர்களின் குறைகளை தீர்க்க முடியும்” என பள்ளி தலைமையாசிரியர் கூறிய வார்த்தைகள், தனக்குள் ஐ.ஏ.எஸ் என்ற கனவை முதலில் விதைத்தாக தெரிவிக்கிறார் புதுதில்லியில் பயிற்சி அதிகாரியாக (உதவி ஆட்சியர், பயிற்சி) நியமிக்கப்பட்டுள்ள பாலசுப்ரமணியம் நடராஜன் ஐஏஎஸ்.

இவர்,1990 ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்று கோவை, சூலூர் தாலுகாவில் உள்ள நடுப்பாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். டாக்டர்.என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் 2009 முதல் 2012 வரை இளங்கலைப் பொறியியல் படித்தார்.

பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முயற்சித்து, 6 வது முயற்சியில் வெற்றி பெற்றார். 2021 இல் யூனியன் பிரதேச சிவில் சர்வீஸில் அவருக்கு பதவி ஒதுக்கப்பட்டது. தற்போது புதுதில்லியில் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவரை அணுகும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு தேர்வுக்கு தயாராவது பற்றி தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வழிகாட்டியும் வருகிறார். இவரிடம் சமீபத்தில் எடுத்த பேட்டியின் தொகுப்பு:

ஐ.ஏ.எஸ் ஆசை எப்போது வந்தது?

எனது பள்ளியில் பிரார்த்தனை நேரத்தில் செய்தி தாள் படிப்பது வழக்கத்தில் இருந்தது. அப்போது 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், நலிவடைந்த பெண்மணியின் கோரிக்கை உடனடியாக தீர்க்கப்பட்டதாக செய்தி வாசிக்கப்பட்டது.

பின்பு, “மாவட்ட ஆட்சியராக வரும் பொழுது மக்களுக்கு உதவ முடியும் அவர்களின் குறைகளை தீர்க்க முடியும்” என பள்ளி தலைமையாசிரியர் கூறினார். இது எனக்கு முதல் தூண்டுகோலாக இருந்தது.

2011 ல் இரண்டாமாண்டு படிக்கும் போது, ஈரோடு மாவட்ட கலெக்டராக ஆனந்தகுமார் ஐஏஎஸ் என்பவர்   இருந்தார். அவர் தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்திருந்தார். இந்த செயல் பெரிதாக பேசப்பட்டது. ஒரு மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற செயலை செய்யும் போது அது செய்தியாக மாறுகிறது.

ஆட்சியர் என்ற பொறுப்பில் இருப்பவர் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது எனவும், என்ன மாதிரியான குறைகளை அவர் தீர்த்து வைக்கிறார் என்பது பற்றியும் தெரிந்து கொண்டேன். நலிவடைந்த மக்களுக்கு உதவுவது, மக்களுடன் தொடர்பில் இருப்பது இவை இரண்டும் தான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற உந்துதலை தந்தது.

பொறியியல் இறுதியாண்டு படிக்கும்போது யு.பி.எஸ்.சி படிப்பதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதற்கான பாடம், எப்படி தேர்வுக்கு தயாராவது என்பது குறித்து ஆராய்ந்தேன்.

அதே சமயத்தில் கல்லூரி வளாக நேர்காணலிலும் தேர்வாகினேன். ஒருபுறம் சிவில் சர்வீஸ், மறுபுறம் வேலை. எதை தேர்ந்தெடுப்பது என குழப்பமாக இருந்தது. பிறகு ஆழ்ந்து சிந்தித்து சிவில் சர்வீஸை தேர்ந்தெடுத்தேன்.

ஐந்து முறை தோல்வியுற்ற போது உங்களுக்கு சோர்வு ஏற்படவில்லையா?  

ஒவ்வொரு தடவையும் ரிசல்ட் வரும்போது லிஸ்டில் என் பெயர் இல்லாத போது சோர்வு ஏற்படும். அப்பொழுதெல்லாம் எனக்கான முழு ஆதரவை பெற்றோர்கள் கொடுத்தனர். ரேங்க் பட்டியலில் பெயர் இல்லாத போது நிச்சயம் சோர்வு ஏற்படும். இருந்தாலும், அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பது தான் முக்கியம். அதேசமயம் ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய கற்றல் திறன் மேம்பட்டது. ஒவ்வொரு அட்டெம்ப்டிலும் என்னை மேம்படுத்திக் கொண்டே இருந்தேன்.

ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டியது?

நிலைத்தன்மை மிக முக்கியம். தேர்வில் கடைசியாக என்ன தவறு செய்தோம் என தெரிந்து கொண்டு அதை சரி செய்ய வேண்டும். நமக்கான யுக்தியை உருவாக்கி அதை, மேம்படுத்த வேண்டும். ஒரே மாதிரியான யுக்தி அனைவருக்கும் கைகொடுக்காது. எதில் நாம் பலமாகவும் பலவீனமாகவும் உள்ளோம் என்பதை அறிய வேண்டும். இதுதான் வெற்றிக்கான மந்திரம்.

நேர்காணலை எப்படி எதிர்கொள்வது?

ஓய்வு பெற்ற அதிகாரிகள், அனுபவம் மிக்க மூத்த அதிகாரிகள் முன்புதான் ஐ.ஏ.எஸ் தேர்விற்கான நேர்காணல் நடைபெறும். முதலில் நாம் ரிலாக்ஸாக, பயம் இல்லாமல் இருக்கவேண்டும்.

அவர்கள், கேட்கும் கேள்விக்கு உண்மையாக பதில் சொல்ல வேண்டும். தெரியாத கேள்வியை, தெரியும் என சொல்லக்கூடாது. சில நேரங்களில் பதில் தெரிந்திருக்கும். ஆனால், சட்டென நினைவுப்படுத்திக் கொள்ள முடியாது. அப்பொழுது யோசிக்க சிறிது நிமிடம் அவகாசம் கேட்கலாம். விடை தெரிந்தால் சொல்லலாம், தெரியவில்லை எனில் அடுத்த கேள்விக்கு சென்றுவிடலாம். இந்த நேர்காணல், நம் அறிவுத்திறனை சோதிப்பதற்காக வைப்பதில்லை. பர்சனாலிட்டியை சோதிப்பதற்காக வைக்கப்படும் பரிட்ச்சையே.

ஐஏஎஸ் தேர்வை பொறுத்தவரை மதிப்பு, அணுகுமுறை, விடாமுயற்சி, நிலைத்தன்மை ஆகியவை மிக முக்கியமானது என நான் கருதுகிறேன்.