ஈரோடு கிழக்கு: மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமா?

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தல், அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி எப்படி அமையும் என்பதற்கான திசையை காட்டுவது போல அமைந்துள்ளது.

தமிழகத்தில் எத்தனையோ இடைத்தேர்தல்கள் நடந்தாலும், சில தேர்தல்கள் அரசியல் திருப்புமுனை ஏற்பட காரணமாக இருந்துள்ளன. சில இடைத்தேர்தல் முடிவுகள், அடுத்து வரும் பொதுத்தேர்தலுக்கு பொருந்தவில்லை என்றாலும், அரசியல் மாற்றங்களுக்கு அச்சாரமிட்டுள்ளன.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டு அதிமுக உருவான உடனடியாக 1972 இல் நடந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பொருந்திவரவில்லை. (திண்டுக்கல் போல மாநில அளவில் 60 சதவீத வாக்குகளை அதிமுக பெறவில்லை). ஆனால், இடைத்தேர்தல் விளைவு திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என மக்கள் மத்தியிலும், அப்போதைய காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் இந்திரா காந்தி மனதிலும் பதிவானது.

அதே தோற்றத்தை ஜனதா தலைவர்களான பா.ராமச்சந்திரன், குமரி ஆனந்தன் ஆகியோர் மனதிலும் உருவாக்கியதால், அது 1977 இல் திமுகவுக்கு கூட்டணி வாய்ப்பை கிடைக்கவிடாமல், ஜனதா தனித்துப் போட்டியிடும் சூழல் உருவானது.

அதேபோல, 1994 இல் மயிலாப்பூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை இடைத்தேர்தல் முடிவு அதிமுக வலிமையோடு இருக்கிறது என்பதையும், அதோடு சேர்ந்தால் காங்கிரசுக்கு இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையயும் அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மனதில் விதைத்தது. ஆனால், நிலைமை வேறாக மாறி, ஜி.கே.மூப்பனார் தலைமையில் தமாகா உருவாகி, திமுக, தமாகா கூட்டணி உருவாகி நடிகர் ரஜினி ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மேலும், 2004 பொதுத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவுக்கு சரியான அமைப்பு இல்லாத சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்), திமுக வலிமையாக இருக்கும் சைதாப்பேட்டை இடைத்தேர்தல் நடந்தது. அதில் அதிமுகவின் வெற்றியால், மத மாற்றச் தடை சட்டத்தால் மக்களிடம் எவ்வித மாற்றமும் இல்லை, அதிமுக வலிமையாக உள்ளது என்ற தோற்றத்தையும் கொடுத்தது.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மனதில் உருவாக்கியது. ஆனால், அடுத்து வந்த 2014 மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

மேலும், 2011 பேரவைத் தேர்தலுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை பாமக களம் இறக்கி 25 சதவீத வாக்குகளை பெற்று 2 வது இடத்தைப்பிடித்தது. அதன்பின் முதலிடம் பிடித்த திமுக, 2 வது இடம் பிடித்த பாமக மேலும் விசிக இடம்பெற்ற கூட்டணி 2011 பேரவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

பாமக, விசிக ஒரே கூட்டணியில் இருப்பதால் வடதமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை திமுக அணி எடுக்கக்கூடிய அளவுக்கு வாக்கு பலம் இருந்தும், அது எலி, தவளை நட்பாகி கூட்டணி கட்சிகளுக்குள் வாக்குகள் சரியாக பரிமாற்றம் ஆகாமல் திமுக, பாமக, விசிக என மூன்று கட்சிகளும் படுதோல்வி அடைந்தன.

அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டப்பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவரால் இரட்டை இலை, உதயசூரியனை மீறி சுயேச்சை சின்னத்தில் 50 சதவீத வாக்குகளுடன் வெற்றிப்பெற முடிந்தது. ஆளும் கட்சியான நன்கு பரிட்சயமான மதுசூதனனை வேட்பாளராக நிறுத்திய அதிமுக 26 சதவீத வாக்குகளுடன் 2 வது இடத்தையும், திமுக டெபாசிட் தொகையை பறிகொடுக்கும் நிலையும் உருவானது.

இடைத்தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப்பெற்ற தினகரன், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த முடியாமல் 5.5 வாக்குகளை மட்டும் தான் தமிழகம் முழுவதும் பெற்றார். குறிப்பாக சென்னை நகரில் 2001, 2016 பேரவைத் தேர்தல்களில் நல்ல வெற்றியைபெற்ற திமுக, ஆர்.கே.நகரில் டெபாசிட்டை பறிகொடுத்தது. 2019 மக்களவைத் தேர்தலின்போது, பலவீனமான நிலையில் இருந்த திமுகவிடம் தேர்தலில் கூட்டணி வாய்ப்பாக டி.டி.வி.தினகரனை காட்டிய காங்கிரஸ், விசிக, தங்கள் பலத்தை மீறி கூடுதல் இடங்களை பெற்றன.

அதேபோல, தினகரனை கூட்டணி வாய்ப்பாக காட்டிய பாமக, ஆளும் கட்சியான அதிமுகவிடம் பேரம் பேசி 8 இடங்களையும், (ஒன்று மாநிலங்களவை), ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக என பேரம் பேசிய தேமுதிக 4 இடங்களையும் அதிமுக கூட்டணியில் பெற ஆர்.கே.நகர் தேர்தல் முடிவும் ஒரு காரணம்.

2021 பேரவைத்தேர்தலுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் நடந்த விக்கிரவாண்டி, நான்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி வாகை சூடியது. தங்களது கூட்டணிக்குள் பாமக, பாஜகவுக்கு 23, 20 தொகுதிகள் என குறைவாக ஒதுக்கி தக்கவைக்க இரு இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு உதவின.

இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் 64.5 சதவீத வாக்குகள் பெற்றிருப்பது அசாத்திய வெற்றி. அதற்கு மூலக்காரணம் திமுக பின்னிருந்து இயக்கியது தான். இத்தேர்தலில் அதிமுக 25.6 சதவீத வாக்குகளை பெற்று அடிப்படை வாக்குகளை தக்கவைத்துக்கொண்டது. இருப்பினும், நகர்புற உள்ளாட்சியில் கிழக்கு தொகுதியில் 30 சதவீத வாக்குககளை பெற்றிருந்த அதிமுக கூட்டணி (அதிமுக 24.5 சதவீதம், பாஜக 5.6 சதவீதம்) இப்போது 4.5 சதவீத வாக்குளை இழந்துள்ளது.

அதுவும் அதிமுக குறிப்பாக எடப்பாடி பழனிசாமி பலமாக உள்ள கொங்கு மண்டலத்தில் இந்த வாக்குளை இழந்திருப்பது எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் கூட்டணி பேர வலிமையை குறைக்கக்கூடும். இதேநேரத்தில் தென்மாவட்டங்களில் ஏதாவது இடைத்தேர்தல் வந்தால் அதிமுக நிலை என்னவாகும் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பாஜகவால் வட இந்தியர்கள் வாக்குகளும், பாமக போட்டியிடததால் வன்னியர் வாக்குகளும், கிருஷ்ணசாமி மற்றும் ஜான் பாண்டியன் கூட்டணியால் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளும் அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பாமல் இருந்திருந்தால் கிழக்குத் தொகுதியில் அதிமுக மேலும் பின்னடைவை சந்தித்திருக்கக்கூடும்.

இடைத்தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு தீவிர ஆதரவு அளித்து வந்த அண்ணாமலை, இப்போது எல்லோரும் சேர்ந்திருந்தால் இதுபோன்ற நிலை வந்திருக்காது என்றும், மக்களவைத் தேர்தலில் பாஜக முன்னின்று கூட்டணியை கட்டமைக்கும் என்றும் பேசத் தொடங்கியிருக்கிறார்.

இடைத்தேர்தலுக்கு முன்பு நடந்த குஜராத் பேரவைத்தேர்தலில் பாஜக வெற்றிக்கு வாழ்த்தும், மத்திய பட்ஜெட்டுக்கு வரவேற்பும் தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி இப்போது நாகலாந்து, மேகாலயம் மாநிலங்களில் பாஜக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பாஜக கூட்டணியை அதிமுக தவிர்க்க முடியாது என்பதை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதை உணர்த்தும் விதமாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில்போட்டு மிதித்து முழமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்களும் ஜனநாயகம் குறித்து பேசலாமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான மாநில திறன் மேம்பாட்டுப்பிரிவு அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளர். பாஜகவும் தனது பேர வலிமையை கூட்டுவதற்கான முயற்சியை தொடங்கியுளளது என்பதையே இது காட்டுகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அதேபோல, இடைத்தேர்தலுக்கு முன்பு, திமுக வெற்றிக்கு காங்கிரசும் உதவியுள்ளது என்று உரக்க பேசிய கே.எஸ்.அழகிரியின் தொனி இப்போது குறைந்துள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின்போது எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை புகழ்ந்து பேசியும், பாஜகவை அதிமுக ஒதுக்க வேண்டும் என்று பேசிய திருமாவளவன், இப்போது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக திமுக வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டும் என பேசத் தொடங்கியுள்ளார்.

இடைத்தேர்தல் முடிவு வருவதற்கு முந்தையநாள் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்த தேர்தல் முடிவால் திமுகவில் கூட்டணி கட்சிகளின் பேர வலிமை குறையக்கூடும், அதிமுக கூட்டணியில் பேர வலிமை அதிகரிக்கக்கூடும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அடுத்து வரும் மக்களவைத் தேர்தலுக்கு பொருந்திருக்கிறதோ இல்லையோ, மக்களவைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் யார் யார் இடம்பெறக்கூடும் என்னும் திசையை நிச்சயம் காட்டும் என்பதில் ஐயமில்லை.

 பாஜக, அதிமுக கூட்டணி நீடிக்குமா?

அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளிடையே மோதல் முற்றி வருகிறது. இந்த பிரச்சனையில் பாஜக ஐடி பிரிவின் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல்க்குமாரை அதிமுகவில் சேர்த்து அவர் விடுத்த அறிக்கையே அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. ஆனால் இந்த முறை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே, கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளார்.

2019 முதல் பாஜக, அதிமுக கூட்டணி என்பது தோல்வியுற்ற அணியாகவே நீடிக்கிறது. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு, பாஜகவும் அதிமுகவும் விமர்சிக்க தொடங்கி உள்ளது. காரணம் அதிமுகவின் பலம் குறைந்துவிட்டது என பாஜக நம்புகிறது.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக இது குறித்து பேசும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜு பாஜகவுடன் ஆன கூட்டணி தொடர்கிறது என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி எதிர்வினையாற்றி உள்ளார். இவ்வாறாக இருக்க பாஜக, அதிமுக கூட்டணி நீடிக்குமா என்பது கேள்விக்குறி தான். ஒருவேளை இறுதி நிமிடத்தில் பாஜக, அதிமுக கூட்டணி அமைந்தாலும் அது 1996 காங்கிரஸ், அதிமுக கூட்டணியை போன்று பொருந்தா கூட்டணியாக மாற வாய்ப்புள்ளது.