கோவை மதுக்கரையில் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய மக்னா யானை

கடந்த ஐந்தாம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட மக்னா யானை ஆறாம் தேதி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சுமார் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து கோவை மதுக்கரை பகுதியில் உலா வந்தது.

யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் ஊருக்கு வெளியில் சுற்றி திரிந்த யானை தற்போது ஊருக்குள் புகுந்தது.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானையை வனத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பி வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர்.

அதே சமயம் அப்பகுதியில் ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு வெளியேறிய யானை, ஊருக்குள் உலாவி வந்தது. மேலும் வனத்துறையினரின் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பி.கே.புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்குள் நுழைந்ததால் பணியாளர்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

தற்போது அந்த யானை குனியமுத்தூர் பகுதியில் உலா வரும் நிலையில் யானையை விரட்டும் முயற்சியில் சுமார் 70 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த யானை அதன் இருப்பிடத்தை தேடி அலைவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.