தனது பணியாளர்களை கௌரவித்த ‘பி.எஸ்.ஜி’ அறநிலையம்

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறுவிய பேராசிரியர் ஜி.ஆர். தமோதாரன் பிறந்தநாளை (பிப்.,20, 1914) நினைவு கூரும் வகையில் கோவை பி.எஸ்.ஜி அறநிலையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘பணியாளர்கள் தினம்’கொண்டாடப்படுகிறது.

பி.எஸ்.ஜி அறநிலையத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களை சிறப்பிக்கும் வகையில் ‘பணியாளர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் கோவை பி.எஸ்.ஜி கலை கல்லூரியில் உள்ள ஜி.ஆர்.டி. அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் வரவேற்புரை வழங்க, பி.எஸ்.ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரை ஆற்றினார். மேலும், இந்நிறுவனங்களில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 15 பணியாளர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி விருது வழங்கினார்.

அத்துடன் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 61 ஊழியர்களுக்கும், 2 நல்லாசிரியர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தார். இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெறும் 5 பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

எதற்காகவும் மகிழ்ச்சியை தொலைத்து விடாதீர்கள்!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்: எனது மகனும், மருமகளும் பி.எஸ்.ஜி நிறுவனத்தில் தான் பணிபுரிகின்றனர். அதனால் நானும் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் தான். இந்த உன்னதமான நிறுவனத்தை பற்றி நினைக்கும் போது, ஆச்சரியம் பொங்குகிறது. ஏன் என்றால் பல சிந்தனைகளை வெகு முன்னதாகவே செயல்படுத்தியுள்ளனர்.

தேசிய கீதத்தை 1950 இல் தான் நாடு அங்கீகரித்தது. ஆனால் பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளியில் அதற்கு முன்னதாகவே இதனை கல்வி பாடலாக பாடியுள்ளனர். தொழிற்கல்வியில் இன்று வரை தமிழ் வருமா, வராதா என்று தமிழை தூக்கி பிடித்துக் கொண்டிருப்பவர்கள் கூட, தமிழை புகுத்த தயங்கி கொண்டிருக்கும் நேரத்தில், தொழில் கல்வியில் தமிழை சுதந்திரத்திற்கு முன்னதாகவே புகுத்தி இருக்கிறார்கள். வேதியியல் பாடத்தை தமிழில் சொல்லி தருகின்றனர்.

தாய் மொழியில் தொழில் கல்வியை சொல்லி கொடுக்க வேண்டும் என்று, சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்னும் பல அரசுகள் இப்பொழுதுதான் ஆரம்ப பாடத்தையே தாய் மொழியில் சொல்லி கொடுக்க அடியெடுத்து வைக்கிறார்கள். ஆனால் பி.எஸ்.ஜி அதற்கு முன்னோடியாக உள்ளது. ஜி.ஆர். தாமோதரன் அவர்களைப் பற்றி நினைக்கும் பொழுது நான் பெருமை அடைகிறேன். 1948 இல் அவர் கலை கதிர் என்ற தமிழ் பத்திரிக்கையை துவங்கி இருக்கிறார்.

பணியாளர்களுக்கு பெருமை சேர்ப்பது என்பது ஒரு நல்ல எண்ணம். அவர்கள்தான் ஒரு நிறுவனத்தின் தூண்களாக இருக்கிறார்கள். ஆனால் எத்தனை நிறுவனங்கள் பணியாளர்களை சிந்திக்கிறது, பணியாளர்கள் நிறுவனங்களை சிந்திக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது.

பணி செய்பவர்கள் எப்படி நிறுவனத்திற்கு பக்கபலமாக இருக்கிறார்கள், அதே நேரத்தில் பணி அமர்த்துபவர்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு எப்படி பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை தான் நாம் இந்த பணியாளர் தினத்தில் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

விவேகானந்தர் சொன்னது போல, அனைவரும் வாழ்க்கையில் ஒரு ஆற்றலுடன் பிறந்திருக்கிறோம். ஆற்றல் இல்லாமல் யாரும் இல்லை. இல்லாத ஆற்றலை எதிர்பார்ப்பதை விட, இருக்கும் ஆற்றலை பயன்படுத்தி கொள்வது தான் சிறந்த நிர்வாகம். அதைத்தான் இந்த நிறுவனம் செய்து வருகிறது.

அவசர உலகில் எல்லாம் அவசரமாக நிறைவேற வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம்மை புதுப்பித்துக் கொண்டால் தான் நம் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

பணியாளர்களை சரிசமமாக பார்க்க வேண்டும். அந்த வகையில் பி.எஸ்.ஜி நிறுவனத்தை பற்றி படிக்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது. எல்லாவற்றிலும் முதன்மையாக உள்ளனர். நிறுவனத்தைத் தாண்டி சமூக ரீதியான பார்வையையும் கொண்டிருப்பதை பார்த்து நான் மகிழ்கிறேன். கல்வியில் ஒருவர் தனது அஸ்திவாரத்தை போட்டால், அதுதான் இந்த நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய பாக்கியம்.

தற்போதைய மாணவர்கள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களை விட ஆசிரியர்கள் சரியாகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். பல அரசியல் மாநாடுகளுக்கு நான் சென்றுள்ளேன். ஆனால் அப்பொழுதெல்லாம் எனக்கு பயம் ஏற்படாது. ஆனால் மாணவர்கள் மத்தியில் பேசும் பொழுது பயம் வரும். ஏனென்றால், இன்றைய மாணவர்கள் நம்மை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு ஏற்றார் போல பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

எங்களைப் போன்றவர்கள் இன்று மேடையில் நின்று பேசுவதற்கு ஆசிரியர்கள் தான் முக்கிய காரணம். மாணவர்கள் எந்த அளவிற்கு பாடத்தை விருப்பம் உடையவர்களாக ஏற்றுக் கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு ஆசிரியர்கள் தம்மை தாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எந்தப் பணியில் இருந்தாலும் பொருந்தும்.

என்ன பிரச்சனை நம்மிடம் இருக்கிறது என்பதை பார்த்து சரி செய்து கொண்டால், வாழ்க்கையில் முன்னேற முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக எதற்காகவும் மகிழ்ச்சியை தொலைத்து விடாதீர்கள். அனைத்திற்கும் தீர்வு இருக்கிறது.

எல்லாவற்றையும் நேர்மறையாக எண்ணும் பொழுது, அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதை நமக்கு உணர்த்தும். நன்றாக பணி செய்ய வேண்டும் என்றால் மனதும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். யோகா செய்யும் பொழுது நமது பணியை இன்னும் அதிகமாக குறைந்த நேரத்தில் செய்ய முடியும். ஒரு பணிக்கான சக்தி நம்மிடம் இருக்க வேண்டும்.

கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சவால்களை சமாளிப்பது தான் வாழ்க்கை. வேலையை மகிழ்வாக பழகிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையை திட்டமிட்டு வாழுங்கள். பணியாற்றும் நிறுவனத்திற்கு உண்மையாக இருங்கள். அது நீங்கள் செய்யும் நன்றி கடன். நிறுவனமும் தங்கள் பணியாளர்களை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் எனப் பேசினார்.