கோவை அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் மருந்துகள் தட்டுப்பாடு  

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயற்கை மற்றும் யோகா பிரிவின் கீழ் சித்தா, ஆயுர்வேதம், யோக சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகின்றன மற்ற பிரிவுகள்போல சித்தா பிரிவிலும் புற நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காய்ச்சல், சளி, தோல் நோய், மூலம், சர்க்கரை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சித்தா பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாள்தோறும் 100 க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்த பின் ஆங்கில மருத்துவத்தை காட்டிலும் சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க தொடங்கியுள்ளனர். இதனால் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இயற்கை சிகிச்சைகளுக்கான மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சித்தா சிகிச்சைப் பிரிவில் ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடும், ஒரு சில மருந்துகள் முற்றிலுமாக இல்லாத நிலையும் காணப்படுகிறது.

இதனால் நோயாளிகளை வெளி மருந்தகங்களில் மருந்துகள் வாங்கிக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒரு சில கஷாய பொடிகளுக்கும் பற்றாக்குறை இருப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர்கள் கூறியதாவது: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்தா உள்ளிட்ட இயற்கை மருத்துவப் பிரிவு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும் போதிய அளவு மருந்துகளை வழங்குகிறது. ஒரு சில நேரங்களில் மருந்துகள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நோயாளிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே வெளியில் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

சித்தா பிரிவுகளில் கூடிய வரையில் போதிய மருந்துகள் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.