ராயல் கேர் மருத்துவமனையில் அல்ட்ராசவுண்ட் அறுவை சிகிச்சை சாதனம் அறிமுகம்

இந்தியாவில் முதன்முறையாக அல்ட்ராசவுண்ட் அறுவை சிகிச்சை என்ற நவீன வசதி, கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காந்த அதிர்வு வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் அல்ட்ராசவுண்ட் அறுவை சிகிச்சை (MRgFUS) சாதன செயல்பாட்டினை இந்தியாவிற்கான இஸ்ரேல் நாட்டின் தூதல் நோர் கிலோன் ராயல் கேர் மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

கை, கால் போன்ற உடலுறுப்புகளில் காணப்படும் உதறல்கள், நடுக்கங்கள் பிரச்சனைக்கு பல்வேறு மருந்துகளின் மூலம் நீண்ட காலமாகவே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குறிப்பிட்டு சொல்லும்படியான சிகிச்சைப் பலன்கள் இவற்றில் கிடைக்கப்பெறுவதில்லை.

இப்புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சையானது, இந்தியாவின் நலவாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு அங்கமான மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் ஒப்புதல் பெற்றதாகும். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான USFDA நிறுவனமும் MRgFUS சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன் இதுபற்றி கூறியதாவது: மருத்துவத் துறையில் புதியதாக கண்டறியப்படும் புத்தாக்க சாதனங்களையும், செயல்பாடுகளையும் அறிமுகம் செய்வதில் இந்நாட்டில் பல தருணங்களில் இம்மருத்துவமனை முன்னோடியாக இருந்திருக்கிறது.

பார்கின்சன்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கு காந்த அதிர்வு வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் அல்ட்ராசவுண்ட் (MRgFUS) என்பது, அவைகளுள் அதிக நவீன மற்றும் மிக சமீபத்திய சிகிச்சை செயல்முறையாகும். மூளை – நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் இந்த சிகிச்சைக்கான மருத்துவ செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.