கோவை அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தூய்மை பணிகள் தேங்கியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்தப் பணியில் சுமார் 700 தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மூன்று சிப்டு அடிப்படையில் சிப்டுக்கு 200 முதல் 300 பேர் வரை தினமும் கோவை அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியை மேற்கொள்வது உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு நாளொன்றுக்கு 412 ரூபாய் ஊதியம் வழங்கப்படு வருகிறது. ஆனால் கடந்த மார்ச் மாதமே தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 721 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியானது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகியும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஒப்பந்த ஊழியர்கள் பலமுறை தனியார் நிறுவனத்திடம் இதுகுறித்து முறையிட்டும் பயனளிக்கவில்லை. இதனால், கோவை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட நிறுவனத்தினர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய உயர்வு குறித்து உறுதி அளித்தால் மட்டுமே மீண்டும் வேலைக்குத் திரும்ப உள்ளதாக போரட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

தூய்மைப்பணியாளர்கள் நடத்தி வரும் இந்த காத்திருப்பு போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை பணிகள் தேக்கமடைந்துள்ளன.