ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பொங்கல் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கிராம வாழ்வியல் சூழலை இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கொண்டுச் செல்லும் வகையில் கிராமரிய ஆடை அலங்காரப் போட்டி நடத்தப்பட்டது. அதில் கிராம மக்களைப் போலவே தோற்றமளித்த மாணவர்கள் ‘அழகிய தமிழ்மகன்’களாகவும் மாணவிகள் ‘அழகிய தமிழ்மகள்’களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கிராமப்புற பெண்களைப் போல் ஆடை அலங்காரம் செய்து கொண்டு, உரலில் நெல் குத்துதல், முறத்தில் புடைத்தல் என மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அம்பியில் மஞ்சள் அரைத்தும், பூக்கட்டியும், கைவினைப் பொருட்கள் செய்தும் மாணவர்கள் அசத்தினர்.

சக்கர வண்டி ஓட்டியும், நொண்டியடித்து விளையாடியும், பல்லாங்குழி விளையாடியும், ஐந்து கல் ஆடியும், கோலி குண்டு விளையாடியும் வெற்றி வாகை சூடினர். அதைத் தொடர்ந்து நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் பரிசுகள் வழங்கினார்.