டாடா குழுமம் ஐபோன் தயாரிப்பை கையில் எடுக்க உள்ளதா?

இந்தியாவில் இதுவரை ஐபோன்களின் பாகங்கள் அசெம்பிள் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இல்லை. இந்தியாவிலேயே ஐபோன் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், விலையுயர்ந்த ஐபோன்களின் விலை குறையவும் வாய்ப்பு உண்டு

டாடா குழுமம் விரைவிலேயே ஐபோன் தயாரிக்கும் உற்பத்தி கூடத்தை வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் கார்ப்பரேஷன் மற்றும் விஸ்ட்ரான் போன்ற மூன்று தைவானிய ஐபோன் உற்பத்தி நிறுவனங்கள் அமைந்துள்ளது.

இந்தநிலையில் டாடா குழுமம் விஸ்ட்ரான் ஐபோன் உற்பத்தி கூடத்தை வாங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் 2.2 மில்லியன் சதுர அடியில் அமைந்துள்ளது, விஸ்ட்ரான். இதை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையில் டாடா குழுமம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் விஸ்ட்ரான் உற்பத்தி கூடத்தைக் கைப்பற்றுவதை இலக்காக வைத்து டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. டாடா குழுமம் விரைவிலேயே ஐபோன் தயாரிக்கும் உற்பத்தி கூடத்தை வாங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள போதும், இரு தரப்பில் இருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

ஒருவேளை டாடா குழுமம் விஸ்ட்ரான் உற்பத்தி கூடத்தை வாங்கிவிட்டால், இந்தியாவிலேயே ஐபோன் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் விலையுயர்ந்த ஐபோன்களின் விலை குறையவும் வாய்ப்புகள் உண்டு என்று கூறுகிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்துடனான வணிகத்தை அதிகரிக்க டாடா மற்ற நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. டாடா நிறுவனம் 1.4 பில்லியனில் 100 ஆப்பிள் ஸ்டோர்களை தொடங்கப்போவதாக முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

News source: vikatan Tamil