ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் புதுமை ஆய்வகம் துவக்கம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து புதுமை ஆய்வகம் கல்லூரி வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளது. இதனுடைய துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அலமேலு வரவேற்புரை வழங்கினார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி விழாவிற்கு தலைமையேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து, கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்திலிருந்து நிர்வாக துணைத் தலைவர் ஸ்ரீ பிரசாத் ஷெட்டி மற்றும் துறைத்தலைவர்கள் ராஜேஷ் கோசல்ராம், சஞ்சீவ் குப்தா, அதுல் குல்கர்னி ஆகியோர்  மாணவர்களுக்கு ஆய்வகத்தின் முக்கியத்துவத்தையும், ஆய்வக வசதிகளை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என உரையாற்றினார்கள். பின்னர், கல்லூரி வளாகத்தில் ஆட்டோமோட்டிவ் துறைக்காக 1500 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்ட புதுமை ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள் மற்றும் கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்தின் பல துறையை சார்ந்த உயர் அதிகாரிகள், 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.