சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் நிறுவனர் நாள் விழா

கோவை மேட்டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் நிறுவனர் நாள் விழா வியாழக்கிழமையன்று நடைபெற்றது. பள்ளியின் வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிறுவனர் நாள் நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். நிர்வாக அறங்காவலர் ராமசாமி தலைமையுரையாற்றினார். செயலர் கவிதாசன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாணவர்கள் ரூபேஷ் மற்றும் சுவேதா ஸ்ரீவர்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய சிறப்பு விருந்தினர், கலை நிகழ்ச்சிகளை மாணவ மாணவியர்கள் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். பாடங்களைப் படிப்பதோடு, நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ளச் சிறந்த வாய்ப்பாக அமைவதுதான் கலை நிகழ்ச்சிகள். கலைநிகழ்ச்சிகள் மாணவர்களின் ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கக் கூடியவை. வருங்காலத்தில் மாணவ மாணவியர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில், சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருவதை இப்பள்ளியில் நான் பார்க்கிறேன்.

மாணவர்கள் பல திறமைகளை வளர்த்துக்கொள்கின்ற விதத்தில் பள்ளியில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதை கண்டு மகிழ்கின்றேன். மாணவ மாணவியர்களுக்கு திறமையை வளர்க்க துணையாக இருக்கின்ற அனைவரையும் நான் பாராட்டுகிறேன். என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளியின் 25 ஆம் ஆண்டு, வெள்ளிவிழா சிறப்பு மலர் மற்றும் பள்ளியின் நிறுவனர் ‘தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் வரலாறு’ நூல் ஆகியனவற்றை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி வெளியிட சிறப்பு விருந்தினர் சமீரன் பெற்றுக்கொண்டார்.

மேலும், சிறந்த ஆசிரியர்கள், விளையாட்டு போட்டி மற்றும் தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.