சொத்துவரியுடன் குடும்ப அட்டை, பான் கார்டு விபரங்களை ஜன.,31 க்குள் இணைக்க அறியுறுத்தல்

சொத்துவரி விதிப்புடன் குடும்ப அட்டை, பான் கார்டு மற்றும் ஜி.எஸ்.டி விபரங்கள் வரும் 2023 ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டுமென கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்

மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

நகராட்சி நிர்வாக மென்பொருளில் உள்ள வரிவிதிப்புதாரர்களின் விபரங்களை மேம்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புதாரர்களும் தங்களது சொத்துவரி விதிப்பு எண்களுடன் குடும்ப அட்டையினை இணைக்க வேண்டும்.

வணிக நிறுவனங்கள் தங்களது சொத்துவரி விதிப்பு எண்ணுடன் பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்கள் குறித்த விபரங்களை இணைக்க வேண்டும். மாநகராட்சியின் வரியில்லா இனங்களின் குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி விவரங்களை இணைக்க நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட குடியிருப்புதாரர்கள் தங்களது சொத்துவரிவிதிப்பு புத்தக நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் போன்ற ஆவணங்களுடனும், மேலும் மாநகராட்சி பகுதிகளில் செயல்படுகின்ற வணிக நிறுவன உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி புத்தக நகல் அல்லது பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி ஆவணங்களுடனும், மாநகராட்சி வரியில்லா இனங்களுக்கான வருடாந்திர குத்தகை இன குத்தகைதாரர்கள் மற்றும் மாதாந்திர கடை உரிமைதாரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட குத்தகை எண்களின் விபரத்துடன் தங்களது பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்களுக்கான ஆவண நகல்களுடன் வார வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை நேரில் அணுகி இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் 31.01.2023-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.