குஜராத், ஹிமாசலம்: துருப்புச் சீட்டானது ஆம் ஆத்மி

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்முடிவுகளை ஆய்வு செய்தால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டாக ஆம் ஆத்மி கட்சி மாறியிருப்பது தெரியவந்துள்ளது.
நடந்து முடிந்த குஜராத் பேரவைத் தேர்தலில் 7 வது முறையாக, அதுவும் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸிடம், பாஜக ஆட்சியை மயிரிழையில் இழந்துள்ளது. இந்த முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தால் குஜராத்தில் கடந்த முறை பாஜக பெற்றதைவிட 4 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக 53 சதவீதம், காங்கிரஸ் 27, ஆம் ஆத்மி 13 சதவீதம் என வாக்குகளை பெற்றுள்ளன.

ராகுல் காந்தி இங்கு பிரசாரம் செய்யாதது தான் காங்கிரஸின் பின்னடைவுக்கு முக்கிய காரணம். கடந்த பேரவைத் தேர்தலில் 77 தொகுதிகளை பெற்று பாஜகவுக்கு கடும் போட்டியை கொடுத்தது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் சிறப்பான வியூகம் தான். பட்டேல் சமூக இளம் தலைவர் ஹர்த்திக் பட்டேல், பிற்படுத்தப்பட்ட சமூக தலைவரான அல்பேஸ் தாகுர், தலித் தலைவரான ஜிக்னேஸ் மேவானி ஆகிய மூவரையும் ஆதரவாக திருப்பி மூன்று சமூக வாக்குகளையும் திரட்டி பாஜகவுக்கு கடும் போட்டியை கொடுத்தது காங்கிரஸ். இந்த தேர்தலில் ஹர்த்திக் பட்டேல், தாகுர் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்துள்ளது பாஜகவுக்கு கூடுதல் பலமாக மாறியது. அதேபோல, தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே பூபேந்தர் பட்டேல் எனும் முதல் முறை பேரை சட்டப்பேரவை உறுப்பினரை முதல்வராக்கியது, ஹர்த்திக் பட்டேல் வருகை ஆகியவை பாஜக மீதான பட்டேல் சமூக அதிருப்தியை நன்கு குறைத்தது.

குஜராத் வியூகம்

முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட பூபேந்தர் பட்டேல் முதல்முறை எம்.எல்.ஏ. என்பதால் பிற சமூகத்தினரிடமும் பெரிய அளவில் அதிருப்தி உருவாகவில்லை. பாஜக பட்டேல் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியதை மிக துல்லியமாக கணக்குப் போட்ட ஆம் ஆத்மி கட்சி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இசுதன் காத்வியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது அக்கட்சிக்கு கைகொடுத்துள்ளது.

கடந்த முறை குஜராத் பேரவைத் தேர்தலில் 41 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. இப்போது காங்கிரஸ் பெற்றிருந்த 27 சதவீதம், ஆம் ஆத்மி பெற்ற 13 சதவீதம் ஆகியவற்றை கூட்டினால் 40 சதவீதம் கிட்டதட்ட கடந்த முறை காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் ஆகும். இதை வைத்து பார்த்தால் தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரசுக்கு சாதகமான வாக்குகளை தான் ஆம் ஆத்மி பிரித்துள்ளது தெரியவருகிறது.

ஆம் ஆத்மி நிற்காமல் இருந்திருந்தாலும் குஜராத்தில் பாஜகவின் வெற்றியை தடுத்திருக்க முடியாது. ஆனால், காங்கிரஸ் 40 சதவீத வாக்குகளை பெற்றிருந்தால் பாஜக சுமார் 130 தொகுதிகளையே பெற்று ஆட்சியை பிடித்திருக்கும். இவ்வளவு இமாலய வெற்றியை பாஜக பெறுவதற்கு காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்து, பாஜக, காங்கிரஸ் இடையே மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் ஏற்பட்டிருக்காது.

குஜராத்தில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி என்பது கட்டமைப்பில் காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தாலும்கூட தலைமை என்ற அடிப்படையில் ராகுல் காந்திக்கு போட்டியாளராக அரவிந்த் ஜெஜ்ஜரிவால் உருவாகியிருக்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடஇந்திய மாநிலங்களில் காங்கிரசுக்கு, ஆம் ஆத்மி போட்டியாளராக வந்து தலைவலியை உருவாக்கக்கூடும்.

ஹிமாசல பிரதேசம்

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும் தன்மை கொண்டது ஹிமாசல பிரதேசம். ஆனால், இதேபோன்ற அரசியல் சூழலை கொண்ட உத்திரகாண்டில் வரலாற்றை மாற்றி அமைத்தது பாஜக. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த பேரவைத் தேர்தலில் மீண்டும் 2 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது பாஜக.

ஹிமாசல் பிரதேசத்தில் கடந்த முறை பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட துமால் 2,000 வாக்குகளில் தோல்வி அடைந்ததால் ஜெய்ராம் தாக்குரை (மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரின் தந்தை) முதல்வராக்கியது பாஜக. இந்த முறை அவரது தலைமையில் தான் மீண்டும் பேரவைத் தேர்தலை சந்தித்தது பாஜக. ஆனால், 26 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது.

40 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது நாடு முழுவதும் சோர்ந்து கிடந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு சற்று உற்சாகத்தை கொடுத்துள்ளது. காங்கிரஸ் 40.9 சதவீதம், பாஜக 40 சதவீதம் என இரு கட்சிகளுக்கு இடையே வாக்குவித்தியாசம் 0.9 சதவீதம் மட்டுமே. குஜராத்தில் காங்கிரஸ் வாக்குகளை பிரித்த ஆம் ஆத்மி இங்கு ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. கூடுதல் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்திருந்தால் இங்கும் தாமரை ஆட்சி மலர்ந்திருக்கும்.

ஹிமாசல பிரதேச காங்கிரஸ் வெற்றிக்கு பிரியங்கா காந்தியின் கடினமான உழைப்பும், பாஜக தலைவர் நட்டாவின் தவறான வியூகமும் தான் காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. உத்தரகண்ட், குஜராத், ஹிமாசலம் போன்ற மாநிலங்களில் முதல்வர் மீதும், முதல்வர்களின் சொந்த சமூகத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட்டது உண்மைதான். ஆனால், உத்தரகாண்ட், குஜராத்தில் சரியான வியூகத்தை பாஜக கையாண்டு அந்த அதிருப்தியை மழுங்கடித்து வெற்றிபெற்றது.

நட்டாவின் தவறான வியூகம்

குறிப்பாக உத்தரகாண்டில் இருமுறை முதல்வரை பாஜக மாற்றியது. இருவரும் தாக்குர் சமூகத்தை சேர்ந்தவர் தான். புஸ்கர் சிங் தாமி முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் பிற சமூக எதிர்ப்பு குறைந்த பாஜக வெற்றிபெற்றது. குஜராத்திலும் அதே அணுகுமுறையை தான் பாஜக கையாண்டது. இதை துல்லியமாக கணக்குப் போட்ட அரவிந்த் ஜெஜ்ஜரிவல், பிராமணர் சமூகத்தை சேர்ந்த சந்தீப்குமார் பதக் என்னும் ஐஐடி பேராசிரியரை மாநிலங்களவை உறுப்பினராக்கி அம்மாநிலத்தின் மாநில பொறுப்பாளராக நியமித்தார்.

தங்களுக்கு சாதகமான பிராமண சமூக வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்துவிட்டால் பாஜக வாக்கு வங்கி குறையும் என கணக்குப்போட்ட நட்டா, ஹிமாசல பிரதேசத்தில் பெரும்பாலான ஆம் ஆத்மி நிர்வாகிகளை பாஜகவில் இணைத்தார். ஆனால், அவரது கணக்கு தப்பி, அதிருப்தி அடைந்த பிராமண சமூக வாக்குகள் காங்கிரஸ் பக்கம் திரும்பியது.பாஜக, காங்கிரஸ் இடையே 0.9 சதவீதம் தான் வாக்கு வித்தியாசம் என்ற நிலையில், குறைந்தபட்சம் கூடுதலாக ஒரு சவீத வாக்குகளை பெற்று 2 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றிருந்தால் பாஜக ஆட்சியை மீண்டும் தொடர்ந்திருக்கும்.

மேலும், ஹிமாசல பிரதேசம் போன்ற சிறிய மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஆதரவு என்பது முக்கியமானது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி காங்கிரசுக்கு கைகொடுத்தது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பாஜக வாய்திறக்கவில்லை.

பொது சிவில் சட்டம்

அதேபோல, பாஜக தேர்தல் வாக்குறுதியில் பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டது. அங்கு சிறுபான்மையினர் வாக்குகள் 2 சதவீதம் கூட கிடையாது. அவர்களை மையமாக வைத்து பொதுசிவில் சட்டத்தை பேசுவதை ஹிந்துக்கள் மத்தியில் ஆதரவலையை தரவில்லை. உத்தரபிரதேசம் போன்ற கணிசமான சிறுபான்மையினர் வாழும் மாநிலங்களில் தான் பொது சிவில் சட்டம் போன்ற வாக்குறுதிகள் ஹிந்துக்கள் மத்தியில் ஆதரவு அலையை உருவாக்கும்.

பாஜகவின் இந்த தவறான வாக்குறுதியால், அதிருப்தி அடைந்த பாஜகவுக்கு ஆதரவு தரவாய்ப்புள்ள சீக்கியர், ஜெயின் தலா 1 சதவீதம் என இரண்டு சதவீத வாக்குகள் காங்கிரசுக்கு ஆதரவாக மாறியது. நகர்புற பகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியை தழுவியது இதுவே முக்கிய காரணம்.

மேலும், பாஜகவில் போட்டி வேட்பாளர்கள் அதிகம் களம் இறங்கியதும் 10 முதல் 15 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். ஹிமாசல ஆட்சியை பிடித்தது, இனி வரும் மணிப்பூர், திரிபுரா, கர்நாடகம், சத்தீஷ்கர் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஹிமாசலில் தோல்வி அடைந்த பாஜக இனிவரும் தேர்தல்களை நுணுக்கமாகவும், கவனமாகவும் கையாள வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது.