அமைச்சரவையில் உதயநிதி?

தமிழக அமைச்சரவையில் உதயநிதி எப்போது உதயமாவார் என்ற கேள்வி திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

வாழையடி வாழையாக வாரிசு அரசியலுக்கு பெயர் போனது திமுக. திமுகவில் அண்ணா தலைமைப் பொறுப்பில் இருக்கும்போதே முரசொலி மாறன், பின்னர் கருணாநிதி காலத்தில் மு.க.ஸ்டாலின்,  மு.க.அழகிரி, கனிமொழி,  தயாநிதி மாறன்  என இறுதியாக இப்போது உதயநிதி ஸ்டாலின் களம் இறக்கப்பட்டு மாநில இளைஞர் அணி செயலர், எம்.எல்.ஏ. என்ற பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.

திமுக எப்போதெல்லாம் வெற்றிபாதையில் பயணிக்கிறதோ அப்போது தனது வாரிசுகளை முன்னிறுத்துவதை கருணாநிதி வழக்கமாக கொண்டிருந்தார். 1967 பேரவைத் தேர்தல் திமுக வெற்றிக்குபின் முரசொலி மாறனையும், 1971 பேரவைத் தேர்தல் வெற்றிக்குபின் இளைஞர் அணியிலும், 1996 பேரவைத் தேர்தல் வெற்றிக்குபின் மேயராகவும், 2006 பேரவைத் தேர்தல் வெற்றிக்குபின்  துணை முதல்வராகவும் ஸ்டாலினை படிப்படியாக அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார் கருணாநிதி.

2006 தேர்தல் வெற்றிக்குபின் அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி, தென்மண்டல அமைப்புச் செயலர் பதவி, கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, மகளிர் அணி செயலர் பதவி என திமுகவில் வாரிசு அரசியல் அறிமுகம் உச்சம் தொட்டது.

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை 1989 பேரவைத் தேர்தலில் வெற்றிக்குபின் மாநில இளைஞர் அணி, எம்.எல்.ஏ., மேயர், துணைப் பொதுச்செயலர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணைமுதல்வர், துணைப்  பொதுச்செயலர், பொருளாளர், எதிர்கட்சித்  தலைவர், செயல்  தலைவர் என 50 ஆண்டு நீண்ட அரசியல் பயணத்துக்குப்பின்  இப்போது திமுக தலைவர், தமிழக முதல்வர் என அரசியலில் உச்சத்தை அடைந்துள்ளார்.

கருணாநிதி என்ற ஆழமரத்துக்குக்கீழ் விதையாய் முளைத்த ஸ்டாலின் விருட்சமாக வளர 50 ஆண்டுகள் ஆகியது. நீண்ட, பழுத்த அனுபவசாலியான ஸ்டாலின், தனது மகனுக்கு உடனடியாக அமைச்சர் பதவி கொடுப்பாரா அல்லது கருணாநிதி போல தனது நிழலில் உதயநிதியை பக்குவப்படுத்துவாரா என்பது தான்  இப்போதைய  கேள்வி.

மு.க.அழகிரி போல அமைப்பு ரீதியாக வாக்குகளை திரட்டும் திறனோ அல்லது கனிமொழி போல சமூக ரீதியாக மக்களை கவரும் திறனையோ இதுவரை உதயநிதி வெளிப்படுத்தவில்லை. திரைக்கலைஞர் என்பதால் மக்கள் உணர்வை புரிந்துகொண்டு யதார்த்தமாக பேசும் திறனை கொண்டுள்ளார். 

தனது தாத்தா கருணாநிதி வென்ற சேப்பாக்கம் – திருவில்லிக்கேணி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி வெற்றிபெற்றதுமே அவர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அவரது நண்பரும், உதயநிதி மன்றத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தான் அமைச்சராக்கப்பட்டார்.

ஓராண்டுக்கு முன்பு அமைச்சர்கள், மாவட்டச்செயலர்கள் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என குரல் எழுப்பியதுடன், மாவட்ட அளவில் தீர்மானங்களையும் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பினர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், உதயநிதியின் 45 வது பிறந்தநாள் கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மீண்டும் பேச்சு எழுந்துள்ளது.

திமுக ஆட்சியை பிடிக்கும்போதெல்லாம்  வாரிசுகளை கருணாநிதி அறிமுகம் செய்ததுபோல, இப்போது ஸ்டாலின், உதயநிதியை ஆட்சிப் பொறுப்பில் அறிமுகப்படுத்துவாரா  என்பது  கேள்விக்குறிதான்.

ஏனெனில், ஸ்டாலினே முதல்முறையாக இப்போது தான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். உடனடியாக உதயநிதியை அமைச்சரவையில் இடம்பெற வைத்தால் 2006 முதல் 2011 வரையிலான ஆட்சி காலகட்டத்தில் திமுகவின் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்கட்சிகள் விமர்சித்தது போன்ற சூழ்நிலை மீண்டும் உருவாகும்.

கருணாநிதியின் அமைச்சரவையில் ஸ்டாலின் இடம்பெற்றப்பிறகு அமைச்சர்களாக இடம்பெற்றிருக்கும் தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி,  எ.வ.வேலு,  அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  பி.டி.ஆர்.பழனிவேல்  தியாகராஜன், கீதா ஜீவன், எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்யநாதன்,  அனிதா  ராதாகிருஷ்ணன், மனோ  தங்கராஜ்  உள்ளிட்டோர்  உதயநிதியை  தங்களின்  தலைவராக  ஏற்றுக்கொள்ள மனதளவில் பக்குவப்பட்டுவிட்டனர்.

ஆனால், கருணாநிதியின் 1989, 1996 அமைச்சரவைகளில் இடம்பெற்றிருந்த பல மூத்த அமைச்சர்கள் இப்போதும் உதயநிதியை முழுமனதாக தங்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்ட கனிமொழி, உதயநிதியை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

கட்சியில் கனிமொழி, உதயநிதி என இரு கோஷ்டிகள் உருவாகி அரசியல் அதிகார முரண் வந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான் கனிமொழிக்கு அண்மையில் துணைப் பொதுச்செயலர் பதவியை ஸ்டாலின் வழங்கினார். பத்து ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியைப் பிடித்த  திமுகவுக்கு,  2024 மக்களவைத் தேர்தல்,  2026 பேரவைத் தேர்தல் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த சூழ்நிலையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்து முன்னிறுத்தினால் கட்சிக்குள் கனிமொழியை சுற்றி அதிருப்தி கோஷ்டி திரளும். குறிப்பாக இப்போது அதிருப்தியில் உள்ள மூத்த அமைச்சர்கள் திரளக்கூடும். கட்சிக்கு வெளியே எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் விமர்சனத்தை வாயில் மெல்வதற்கு திமுகவே காரணமாகிவிடும்.

உதயநிதிக்கு கட்சிக்கு வெளியே பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை, ஆதரவும் இல்லை. வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி பிரசாரம் செய்தும்கூட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற முடிந்தது.

மு.க.அழகிரி போல அமைப்பு ரீதியாக வாக்குகளை திரட்டும் திறனோ அல்லது கனிமொழி போல சமூக  ரீதியாக மக்களை கவரும் திறனையோ இதுவரை  உதயநிதி  வெளிப்படுத்தவில்லை. திரைக்கலைஞர் என்பதால் மக்கள் உணர்வை புரிந்துகொண்டு யதார்த்தமாக பேசும் திறனை கொண்டுள்ளார்.  மேலும், அவரை பொறுத்தவரை முழுநேர அரசியல்வாதி போல இல்லாமல், தனது சினிமா வியாபாரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அமைச்சரவையில் முதல்வருடன் சேர்த்து 34 பேர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 35 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம். எனவே, ஓர் இடம் காலியாக உள்ளது. இதில் உதயநிதியை நிரப்ப ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்துவிட்டார்கள் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு வார காலத்துக்குள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடத்தப்பட்டு அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படக்கூடும் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை, பிரதான எதிர்கட்சி அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது, இது தான் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க உகந்த அரசியல் சூழல் என திமுக தலைமை கருதுகிறது. அதனால் தான் உதயநிதியை அமைச்சராக்க ஸ்டாலின் குடும்பத்தினர் தயார் நிலையில் உள்ளனர். எது எப்படியோ கருணாநிதி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு அரசியல் பதவியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது தான் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.

வாரிசுகளை அரசியல்வாதிகள் அறிமுகப்படுத்தலாம். ஆனால், அதை ஏற்றுக்கொள்வதும்,  ஏற்றுக்கொள்ளாததும் மக்கள் கையில் தான் உள்ளது. மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 பேரவைத் தேர்தலில் தெரிந்துவிடும்.