வையத் தலைமை கொள்!

பல ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்து, விடுதலை பெற்ற இந்திய நாடு, இன்று ஜி-20 எனும் உலகின் செல்வாக்கு மிக்க நாடுகளை உறுப்பினராக கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்கிறது. அந்த வகையில் உலகின் செல்வாக்கும், பொருளாதார வளமும் மிக்க நாடுகளை உறுப்பினராகக் கொண்ட இந்த அமைப்பின் தலைமை பொறுப்புக்கு வந்ததன் மூலம் இந்தியா பல பயன்களை பெற முடியும்.

தற்போதைய சூழலில் உலகம் பலவகையிலும் மாறி வருகிறது. ஒருபுறம் சமீபத்தில் வந்த கொரோனா பெருந் தொற்று, இன்னொரு புறம் வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள். இவை இரண்டும் இணைந்து உலக நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலைகளை மாற்றி அமைத்து வருகின்றன.  முன்பிருந்த சூழ்நிலைகள் முற்றிலும் மாறியிருக்கின்றன.

சில ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகையை விட, இந்திய மக்கள் தொகை அதிகரிக்க போகிறது. இந்த நிலையில் இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு தேவையான உணவு, வேலை, மருத்துவம் என்று பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

உலகில் அதி வல்லமை படைத்த நாடாக இயங்கிக் கொண்டிருந்த அமெரிக்க நாடு, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பொழுது கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனின் பல நாடுகளும் இங்கிலாந்தும் பல இழப்புகளை சந்தித்தன. கொரோனா பெருந்தொற்று எங்கிருந்து பரவியதோ அந்த தொடக்கப் புள்ளி நாடான சீனாவில் இன்னும் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பதே உண்மை. ஆனால் இந்தியா கடுமையான கொரோனா பெருந்தொற்று சூழலை சிறப்பாக சமாளித்ததோடு தடுப்பு மருந்தையும் கண்டறிந்து பயன்படுத்தி பாராட்டு பெற்றது. 130 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது சாதாரணமான செய்தி அல்ல.

அடுத்ததாக ரஷ்யா உக்ரைன் போர் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உலக பொருளாதாரத்தில் இது பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இது போக சீனாவும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பல நாடுகளில் மூலப் பொருட்கள் உள்பட பல உற்பத்தி செயல்பாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாவதாக உலகை அச்சுறுத்தி வரும் பருவநிலை மாறுதல் என்பது தற்பொழுது முக்கிய விவாதப் பொருளாகி வருகிறது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை, வெள்ளம், அடிக்கடி உலக நாடுகளில் ஏற்படும் புயல், மழை போன்றவை குடிநீர் பஞ்சம் என்று பல பாதிப்புகளை பருவநிலை மாறுதல் உருவாக்கி வருகிறது. மேலும்  உலக அளவில் பருவநிலை குறித்த மாநாடுகளில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் வளர்ந்த நாடுகளின் ஒத்துழைப்பு குறைவானதாகவே இருக்கிறது. இது உலகின் எதிர்காலத்துக்கு எதிரானதாகவே முடியும். அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப் காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இருந்தே அந்த நாடு வெளியேறிவிட்டது. தற்பொழுது மீண்டும் இணைந்துள்ளது.

வளரும் நாடுகள் தங்கள் தொழில் வளத்தையும் பொருளாதாரத்தையும் பெருக்க முடியாத அளவு முட்டுக்கட்டைகள் உருவாக்கப்படுகின்றன. இன்னொரு புறம் பொறுப்பேற்கவேண்டிய வளர்ந்த நாடுகளை மற்ற நாடுகள் நிர்பந்திக்க முடிவதில்லை.

நான்காவதாக உலகெங்கும் பணி புரியும் அயல்நாட்டு தொழிலாளர்களின் வேலையின்மை, ஆட்குறைப்பு, மற்ற வாழ்வியல் சிக்கல்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த சூழலில் தான் இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கிறது.

உலகின் பல நாடுகள் பல்வேறு சிக்கல்களால் தவித்து வரும் வேளையில் அவற்றைத் தாண்டி நமது முன்னேற்றத்துக்கான பல செயல்பாடுகளை செய்ய இப்பொறுப்பு உதவும். சில ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகையை விட, இந்திய மக்கள் தொகை அதிகரிக்க போகிறது. இந்த நிலையில் இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு தேவையான உணவு, வேலை, மருத்துவம் என்று பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

அந்த வகையில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகவும், உலக நாடுகளின் ஒத்துழைப்புடனும் இந்தியாவும் முன்னேறும் வகையிலும் இந்த ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை சிறப்பாக ஏற்று செயல்படும் என்று வாழ்த்துவோம்!