“தமிழகத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் இல்லை”

 – அமைச்சர் மா சுப்பிரமணியம் பேட்டி

தமிழகத்தில் டெங்கு, மலேரியா போன்ற பருவநிலை காலங்களில் வருகின்ற நோய் பாதிப்புகள் இல்லை என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தல் மற்றும் தமிழ் மன்றம் தொடக்க விழா, கோவை அரசு மருத்துவமனை மற்றும் சூலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சார் மா.சுப்ரமணியம் பேசியதாவது: மாணவர்கள் மத்தியில் ரேகிங் செய்யக்கூடாது என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கியை சீனியர் மாணவர்கள் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இந்த கல்லூரி தொடங்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிறது. கடந்தாண்டு வரை 150 மாணவர்கள் சேர்க்கை தான் நடைபெற்றது. ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் தற்போது 200 மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில் 71 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. கூடுதல் மாணவர் சேர்க்கையிலும், அதிக மருத்துவக்கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனளித்துள்ளது. இந்தாண்டு மட்டும் 565 பேருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது.

தமிழக மாணவர்கள் கல்வியில் மேம்பட்டுள்ளனர். தமிழக மருத்துவக்கல்லூரிகளில் பெரும்பகுதியான இடங்களை தமிழக மாணவர்களே பிடித்துள்ளன்னர். கோவைக்கு மட்டும் 63 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கிடைத்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மணியகாரன்பாளையத்தில் புதிய நகர்ப்புற சுகாதார நிலையம் அமைய உள்ளது. தமிழகத்தில் 2,286 நகர்ப்புற சுகாதார நிலையங்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. 8713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே சுகாதார நிலையங்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் தான். மக்கள் தொகை அடிப்படையில் இது போதாது. அதனால் புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்பதற்கான முயற்சியில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழகம் மருத்துவத்துறையில் தன்னிறைவு பெறும். மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் சுமார் 1 கோடி பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் உலகிலேயே தமிழகத்தில் தான் செயல்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையங்களில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணிகள் என இதற்காக ரூ.8 கோடியே 78 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, நகர்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய துறைகள் ஒன்று சேர்ந்து அமைச்சர்களும் செயலாளர்களோடு கூட்டம் நடத்தி மாவட்ட வாரியாக இணைப்பு குழுக்களை ஏற்படுத்தி ஒருங்கிணைப்பு குழு மூலம், மாவட்டம்தோறும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாகவே தமிழக முதல் அமைச்சர் வழிகாட்டுதலின்படி ஏற்படுத்தப்பட்டது.

அதன் விளைவு பெரிய அளவிலான வெள்ள பாதிப்புகள் இல்லை. டெங்கு மலேரியா போன்ற பருவநிலை காலங்களில் வருகின்ற நோய் பாதிப்புகள் இல்லை. சிறப்பாக கையாளப்பட்டது. வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் புயல் அறிவிப்பு வந்துள்ளது. இன்று இரவு கரை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது . இந்த புயலால் சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் இன்று நாளையும் பூங்காக்கள் மூடி வைக்கப்பட்டுள்ளது.

உயர் கோபுர விளக்குகள் இறக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் சேவை துறையை சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேர பணியில் இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையாக இருந்தாலும் சரி புயல் எச்சரிக்கை வைக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக இருந்தாலும் சரி எல்லா இடங்களிலும் துணை சுகாதார நிலையம் தொடங்கி அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. உக்கரனில் இருந்து வந்த மாணவர்களுக்கு ஏற்கனவே அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

உக்கரை நாட்டில் அவர்கள் படித்த பாடப்பிரிவு வேறு எந்த நாட்டில் இருக்கிறதோ அங்கு படிக்க தயார் என்ற நிலையில் அந்த கருத்துக்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளோம். இது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

அரசு மருத்துவமனை கட்டிடப் பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டு கொண்டுவரப்படும். தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் வருபவர்கள் தங்கி இருக்க காத்திருப்போர் அறை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.