சி.சுப்பிரமணியம் நினைவு நாள்: திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை

முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

கோவையைச் சேர்ந்தவர் சி.சுப்பிரமணியம். வழக்கறிஞரான இவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்து பணியாற்றியவர். பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் சி.சுப்பிரமணியம் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

பொள்ளாச்சியை அடுத்த செங்குட்டுப்பாளையம் பகுதியில் பிறந்த இவர் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவராக உள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த சி.சுப்பிரமணியம் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தார்.

இதனிடையே அவரது நினைவு நாளான இன்று கோவை ரேஸ்கோர் பகுதியில் உள்ள சி.சுப்பிரமணியத்தின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர் கோவை செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.