கொங்குநாடு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குநர் வாசுகி வரவேற்புரை வழங்கி நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசுகையில்: பட்டம் பேரும் மாணவர்களை பாராட்டி அவர்களது எதிர்காலம் சிறக்க வேண்டும் என வாழ்த்தினார்.

சமூகத்தின் வளர்ச்சியை கட்டமைக்க மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானது என வலியுறுத்தி பல முன்னுதாரண கருத்துக்களை சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும் வாழ்வின் எந்த சூழலிலும் மனிதநேயத்தை கடைசி வரை கடைபிடித்து வாழவேண்டும் என அறிவுரை வழங்கினார். கல்விக்காக உங்களது பெற்றோர்கள் செய்த தியாகத்தை என்றும் மறவாமல் நினைவில் கொள்ளுங்கள். கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களாகிய உங்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என ஊக்கம் அளித்தார்.

இந்த தேசத்திற்காக மாணவர்கள் நீங்கள் ஆற்ற வேண்டிய பங்கு நிறைய உள்ளது. அதனை மனதில் கொண்டு செயல்படுங்கள். நம் சமுதாயத்திற்காக ஏதாவது திரும்பக் கொடுத்து விட்டு செல்லவேண்டும் என்றார்.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் லட்சுமணசாமி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை வாசித்து, கல்லூரி புரிந்த சாதனைகளை தனது உரையில் பட்டியலிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்விக் கழகத்தின் வேந்தர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

பட்டமளிப்பு உரையில் அவர் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கை 2020 இல் உள்ள பல நன்மைகளை எடுத்துக்கூறி பேசினார். அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. அதில் உள்ள பல பலன்களால் இந்தியா மேலும் முன்னேறி செல்ல வழிவகுக்கும் என்றார். இந்தியாவை ஆண்ட பல மன்னர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக செய்த பல செயல்களை தனது உரையில் எடுத்துக்காட்டி கூறினார்.

நிகழ்வில் 1165 இளங்கலை மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர். இதில் 24 பேர் முதல் தரவரிசையில் இடம் பிடித்தனர். கல்லூரியின் டீன் மதன்சங்கர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.