கோவையில் சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் நிறைவு

கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன. அந்த 5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர்.

இதனிடையே கோவை மாநகராட்சியில் சொத்துவரி பொதுச்சீராய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் மண்டலங்களில் உள்ள இடங்கள் மற்றும் கட்டிடங்களின் வகைகள் அடிப்படையில் ஏ,பி,சி,டி என பிரிவுகளில் சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் நடைபெற்றன.

மெயின் ரோடு, பேருந்து செல்லும் சாலைகள் அதன் அருகில் உள்ள பகுதிகள் போன்றவை ஏ பிரிவிலும் அதற்கு உள்ளே உள்ள பகுதிகள் பி, சி, டி பிரிவுகளிலும் வகைப்படுத்தப்பட்டன. அதே போல் இந்த பிரிவுகளில் உள்ள வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என கட்டிடங்கள் வகைப்படுத்தப்பட்டன.

இதன் அடிப்படையில் சொத்துவரி மாநகராட்சி சார்பாக விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் காரணமாக புதிய சொத்துவரி வரிவிதிப்பு கோரும் விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து விண்ணப்பங்களை வழங்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 7 மாதங்களாக சொத்துவரி விண்ணப்பங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால் புதியதாக கட்டிடங்கள் கட்டி முடித்தோர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.