கோவையில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியால் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஹப் என அழைக்கப்படும் பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களின் வரிசையில் கோவை நகரமும் வளர்ந்து வருகிறது. கோவையின் வளர்ச்சியால் தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

கோவையில் கடந்த 10 வருடங்களாக ஐடி நிறுவனங்கள் மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றன. அதற்கு ஏற்றார் போல் கோவை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தலைநகர் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக பல ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தன.

அதில் சில ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டும் உள்ளன. இதுதவிர இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல், மக்கள் தொகை பெருக்கம் என பல்வேறு இன்னல்களை சென்னையில் ஐடி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக, கோவை மாவட்டத்திற்கு ஐடி நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் அரசு சார்பில் சிங்காநல்லூரில் டைடல் பார்க் உள்ளது.

இதுதவிர சரவணம்பட்டி, அவினாசி சாலைகளில் தனியார் ஐடி நிறுவனங்களின் டெக் பார்க்குகள் உள்ளன. இவைகளில் 100க்கும் மேற்பட்ட சிறிய ஐடி நிறுவனங்களும், 20க்கும் மேற்பட்ட பெரிய ஐடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஐடி நிறுவன பிரதிநிதிகள் கூறியதாவது:

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பணி புரியும் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் கோவையை சார்ந்தவர்களே. சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், குடிநீர் போன்றவைகள் காரணமாக பெரும்பாலான மக்கள் கோவையில் பணிபுரியவே விரும்புவார்கள்.

அண்மையில் பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக ஊரே வெள்ளக்காடுகளாக மாறியது. சென்னையிலும் இதே சூழ்நிலை தான்.

வானிலை காரணம் ஒரு புறம், இடநெருக்கடி மற்றொரு காரணம். கோவையில் அப்படி இல்லை. இதமான காற்று, சுத்தமான சிறுவாணி குடிநீர், வெயில் அடித்தாலும் சில்லென வீசும் தென்றல் காற்று என இங்கு ஏராளமான வசதிகள் உள்ளன.

சர்வதேச விமான நிலையமும் உள்ளன. விரைவில் விமான விரிவாக்கத்திற்கு பிறகு வெளிநாடுகளின் விமானங்கள் அனைத்தும் கோவைக்கு வந்து செல்லும். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக கோவைக்கு வரும் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக கோவையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் வளர்ச்சியால் அதை சார்ந்துள்ள பல துறைகளும் கோவையில் வளர்ச்சியடைந்துள்ளன எனக் கூறினர்

இதுகுறித்து எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் கூறுகையில், “சரியான திறன்களை கொண்டவர்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் ஏராளம். கோவை மாவட்டம் ஒரு தொழில்முனைவோர் நகரம். வலுவாக வளரப் போகிறது. ஏராளமான வேலைவாய்ப்புகள் மாணவர்களுக்கு கிடைக்கப்போகிறது” என்றார்.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் பயன் அடைவார்கள். இதனால், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என மக்களிடையே எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.