டாக்டர் சமீரன் எனும் நவரச நாயகன்!

நம் நாட்டில் அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற சில குறிப்பிட்ட துறை சார்ந்தவர்களின் தலைமைப் பண்பு கொண்டாடப்படுவது போல மற்ற துறையினர் கொண்டாடப்படுவதில்லை. அதிலும் அரசுத்துறை அதிகாரிகள் என்றால், சில விதிவிலக்குகளைத் தவிர மற்றபடி யாரும் கண்டு கொள்வதில்லை. அந்த வகையில் ஒரு மாவட்ட ஆட்சியரைப் பற்றி காண்போம்.

பொதுவாக தலைவர்களில் இரண்டு வகை உண்டு. ஜவஹர்லால் நேருவைப் போல, எம்ஜிஆரைப் போல மக்களை காந்தமாக கவர்ந்து இழுப்பவர்கள் ஒருவகை.  லால் பகதூர் சாஸ்திரி, மன்மோகன் சிங் போன்றவர்கள் இரண்டாவது வகை. இவர்கள் பார்வைக்கு எளிமையாக இருப்பதோடு, மக்களோடு மக்களாக இறங்கி உறவாடும் தன்மை கொண்டவர்கள். இந்த இரண்டாவது வகை கொஞ்சம் அபூர்வம் தான்.

ஏனென்றால் ஒருவர் தலைமைப் பதவிக்கு வரும் பொழுது மக்களிடமிருந்து ஒரு சிறிய இடைவெளி ஏற்படுவது இயல்பு. அதுவும் குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது இந்த இடைவெளி இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அவர்களின் தலைமைப் பண்பு என்பது அவர்கள் எவ்வாறு மக்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையும். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் அவர்களை மக்களோடு கலந்து பழகும் தன்மை கொண்டவர் என்று தான் சொல்ல வேண்டும்.

டாக்டர் சமீரன் அடிப்படையில் மருத்துவக் கல்வி பயின்ற ஒரு மருத்துவர், எழுத்தாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் என்று பல தகுதிகள் உள்ளவர். அனைவரிடமும் எளிதில் கலந்து பழகும் தன்மையும் விரைந்து செயல் ஆற்றும் தன்மையும் கொண்டவராக இருக்கிறார். பொது விழாக்கள் பலவற்றிலும் கலந்து கொள்வதோடு அந்தக் கூட்டத்தில் மக்களை தனது உரையால் கவர்வதில் வல்லவராகவும் இருக்கிறார்.

பொதுவாக மாவட்ட ஆட்சித் தலைவர் என்பவர் மொத்த மாவட்டத்திற்கும் பொறுப்பான ஒரு தலைவர். ஏதாவது ஒரு பகுதியில், ஏதாவது ஒரு பணி இருந்துகொண்டே இருக்கும். அந்தந்த பணிக்கு ஏற்ப அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். முடிவுகள் எடுக்க வேண்டும். மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரும்பொழுது வரவேற்க வேண்டும். ஏதாவது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் தான் பொறுப்பாக இருக்க வேண்டும். இது போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் இருப்பதனால் மக்களிடம் பொதுவாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நெருக்கம் இருப்பதில்லை. ஆனால் அந்த பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டு மக்களிடமும் நெருக்கமாக இருப்பது இவரின் தனித் தன்மையாக உள்ளது.

முதலில் அவருடைய சுறுசுறுப்பும், வேகமும் இங்கு பிரசித்தம். அவர் ஒரு கூட்டத்திற்கு வந்து நின்றால் உடனே அங்கே ஒரு புது வேகம் வந்து விடுவதைக் காண முடிகின்றது. அவர் வருகை அந்த சூழலை பாசிடிவ் ஆக மாற்றிவிடும். அது போக அந்த கூட்டத்தின் முக்கிய நோக்கத்தில் இருந்து விலகிப் போகாமல் ஆனால் அதே நேரம் அனைவரையும் அரவணைத்துச் செல்வது அவரது இயல்பாக இருக்கிறது. பல நேரங்களில் அவர் செல்போனை பயன்படுத்தும் விதமும், வேகமும் மற்றவர்களை பிரமிக்க வைக்கும். அதைப்போலவே தேவையில்லாமல் நேரத்தை வீணாக்குவதில்லை. சுற்றி வளைத்து பேசுவதும் இல்லை. எல்லாமே உடனே கேட்டு தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுப்பது நடைமுறையில் இருக்கிறது. அரசின் விதிமுறைகளை, நலத்திட்டங்களை, மக்கள் நலனுக்கு எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்வார்.

அனைத்து தரப்பு மக்களிடமும் நல்லுறவு வைப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லலாம். “போலாம் ரைட்” என்று பள்ளிக் குழந்தைகளின் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, தொழில் அமைப்புகளின் கூட்டமாக இருந்தாலும் சரி, அரசு அதிகாரிகள் கூட்டம் என்றாலும் சரி உடனடியாக அவர்கள் அலைவரிசையுடன் கலந்து விடுவார். கலகலப்பான மேடைப்பேச்சு அவருடைய இன்னொரு பலம். பேச ஆரம்பித்த சில நொடிகளில் கூட்டத்தின் நாடி பிடித்துப் பார்த்து வசப்படுத்தி விடுவார்.

அரசு நிர்வாகத்தில் உள்ள நடைமுறை இடர்பாடுகளைத் தாண்டி எவ்வாறு மக்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பதை இவரைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தன்னை முதன்மைப்படுத்தி கொள்ளாமல், தனது பொறுப்பை அதற்கான நோக்கத்தை முன்னிலைப்படுத்தி செயல்படும் இவரைப் போன்றவர்கள் வளரும் தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.