என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

திமுக தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் களத்தில் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

ஐம்பது ஆண்டுகளாக திமுகவின் தலைவராக கோலோச்சிய கருணாநிதி மறைவுக்குப்பின் தலைவராக பொதுக்குழுவால் தேர்வான ஸ்டாலின், இப்போது உள்கட்சித் தேர்தல் அடிப்படையில் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவை, ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமை ஸ்டாலினையே சாரும்.

பேரவைத் தேர்தலில் எண்ணிலடங்கா வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலினுக்கு 5 ஆண்டுகளுக்குள் அவற்றை நிறைவேற்றிக்காட்டுவது என்பது மிகப்பெரிய சவால். வாக்குறுதிகளை   நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டால் 2024 மக்களவைத்தேர்தல், 2026 பேரவைத்தேர்தல் ஆகியவற்றில் அதற்கான விலையை திமுக கொடுக்க நேரிடும்.

மீண்டும் 2026 இல் திமுக ஆட்சி தான் என ஸ்டாலின் அடிக்கடி பேசி வந்தாலும், அந்த கனவை நனவாக்க பல சவால்களை சந்தித்து வெற்றிபெற்றே ஆக வேண்டும். மாநில அரசு சுமார் ரூ.6.53 லட்சம் கடனில் தத்தளிக்கும் நிலையில், மத்தியிலும் கூட்டணி கட்சி ஆட்சி இல்லாத நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவால் தான்.

2024 மக்களவைத் தேர்தலில் கூட கூட்டணியை அப்படியே தக்கவைத்து மோடி எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியை வைத்து அதிக தொகுதிகளை கைப்பற்றிவிடலாம் என ஸ்டாலின் கணக்குப்போடலாம். ஆனால், மகளிருக்கு மாதம் ரூ.1,000  உரிமத்தொகை, பொங்கலுக்கு குடும்பஅட்டைதாரர்களுக்கு குறைந்தபட்சம்  ரூ.1,000  வழங்காமல் 2026 பேரவைத் தேர்தலை சந்திப்பதே ஸ்டாலினுக்கு சவால். இவை இரண்டையும் நிறைவேற்ற ஆயிரக்கணக்கான கோடி நிதியை திரட்டியாக வேண்டும்.

அரசியல் களத்தை பொறுத்தவரை கருணாநிதி சந்தித்த அளவுக்கு (எம்ஜிஆர், ஜெயலலிதா) அரசியல் ரீதியாக ஸ்டாலினுக்கு போட்டியாளர்கள் இல்லை.  ஆனால், பொதுவெளியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களின் உடல்மொழி, பேசும் வார்த்தைகள் ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக அமைச்சர்கள் க.பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி போன்றவர்களின் பேச்சுக்களே திமுகவுக்கு எதிரான ஆயுதங்களாக மாறி வருகின்றன. துணைப் பொதுச்செயலர் ஆ.ராசா கொள்கை அரசியல் பற்றி பேசினாலும் அது திமுகவின் வாக்கு வங்கியை நஷ்டப்படுத்தும் அளவுக்கு மாறி வருகிறது.

இவர்களில் பலர் ஸ்டாலினை விட மூத்தவர்கள், கருணாநிதியிடம் அரசியல் செய்தவர்கள், ஸ்டாலினின் வளர்ச்சிக்கு உறுதியாக இருந்தவர்கள். இவர்களை கண்டித்து கட்சியை பாதுகாப்பது கூட ஸ்டாலினுக்கு சவாலான பணியாகவே இருந்து வருகிறது. இதனால் தான், தூக்கம் இன்றி தவிப்பதாக ஸ்டாலின் மறைமுகமாக பேசியுள்ளார்.

கருணாநிதி காலத்தில் அதிகப்பட்ச அதிகாரத்தை சுவைத்து பழக்கப்பட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களுக்கு, ஸ்டாலினின் ஜெயலலிதா பாணி அரசியல் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் முழு அதிகாரமும் சென்னையில் குவிந்து கிடப்பதால், கட்சி கிளை நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அமைச்சர்கள், மாவட்டச்செயலர்களால் எவ்வித சலுகைகளையும் செய்துகொடுக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் தங்களுக்கு கிடைத்த சலுகைகள் கூட சொந்த கட்சி ஆட்சியில் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் அடிமட்ட நிர்வாகிகளிடம் உருவாகியுள்ளது.  இதையெல்லாம் சரிசெய்து மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் கீழ்மட்ட நிர்வாகிகளை கட்சிப்பணியாற்ற செய்வது ஸ்டாலினுக்கு நிச்சயம் சவாலாகவே உள்ளது.

பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற 45 சதவீத வாக்குகளில் சிறுபான்மையினர் (13 சதவீதம்),   தலித்கள் (13 சதவீதம்) சரிபாதியாக உள்ளது. ஆனால், தங்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் உரிய பிரதிநிதித்துவத்தை திமுக அளிக்கவில்லை என்ற மனக்குறை சிறுபான்மையினர், தலித்களிடம் உருவாகியுள்ளது.

பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் கண்ணைமூடிக்கொண்டு திமுகவை ஆதரித்த சிறுபான்மையினர் அதிருப்தியில் இருப்பதால் அந்த வாக்குகளை குறிவைத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் நகர்வை செய்வது ஸ்டாலினுக்கு எதிர்காலத்தில் சிக்கலாக மாறக்கூடும்.

அரசியல் களத்தை பொறுத்தவரை கருணாநிதி சந்தித்த அளவுக்கு அரசியல் ரீதியாக ஸ்டாலினுக்கு போட்டியாளர்கள் இல்லை.  ஆனால், பொதுவெளியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களின் உடல்மொழி, பேசும் வார்த்தைகள் ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

திமுக தேர்தல் வாக்குறுதிபடி இஸ்லாமிய சிறைக்கைதிகளை திமுக அரசு விடுவிக்க வேண்டும் என சீமான் அழுத்தம் கொடுத்து வருவது இஸ்லாமியர்களிடம் அவருக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தி வருகிறது.  அதேபோல, தலித் வாக்குகளை குறிவைத்தும் பல்வேறு அரசியல் நகர்வுகளை நாம்தமிழர் கட்சி செய்து வருகிறது.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுவித்தாலோ அல்லது சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தாலோ அது திமுகவுக்கு பாரம்பரியமாக வாக்களித்து வரும் இந்துக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற விவகாரங்களில் திமுகவின் வாக்கு வங்கி சேதாரம் ஆகாமல் நுட்பமாக ஆய்வு செய்து ஸ்டாலின் முடிவு எடுக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் தொடர்ந்து வரும் மின்வெட்டு, நீட் தேர்வை ரத்து செய்வது ஸ்டாலினுக்கு மிப்பெரிய சவால்கள் தான். உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி அவசர சட்டம் கொண்டுவந்து நீட் தேர்வில் தமிழகத்துக்கு மட்டுமே விதிவிலக்கு கொடுக்க வேண்டுமெனில் மத்திய பாஜக அரசுக்கு அரசியல் ரீதியான லாபம் வேண்டும். ஆனால், அந்த லாபத்தை திமுகவால் நேரடியாக கொடுப்பது இயலாத காரியம்.

மத்தியில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து 2024 இல் மோடியை வீழ்த்துவது என்பதுகூட ஸ்டாலினுக்கு சவால் தான். மீண்டும் 2024 இல் மோடி வெற்றிபெற்றுவிட்டால் மத்திய அரசிடம் இருந்து தாராளமாக நிதியை பெற முடியுமா?, நிதிநெருக்கடியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் 2026 இல் திமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவருவது ஸ்டாலினுக்கு சிக்கலாக மாறிவிடும்.

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சமாளிப்பது கூட ஸ்டாலினுக்கு இப்போது பிரச்சினையாக மாறியுள்ளது. மேற்கு வங்கம், கேரளம் அளவுக்கு தமிழகத்தில் ஆளுநருடன் மோதல் போக்கு இல்லை என்றாலும், நிர்வாக ரீதியாக ஸ்டாலினுக்கு பல சிக்கல்கள் இருப்பது கண்கூடாக தெரிகிறது. குறிப்பாக ஆளும் கட்சி நிர்வாகிகளை பொறுத்தவரை எம்.எல்.ஏ., எம்.பி. பதவி கிடைக்காதவர்கள் கூட கூட்டுறவுச் சங்கப் பொறுப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பது வழக்கம். ஆனால், கூட்டுறவுச் சங்கப் பொறுப்புகளை கலைக்க ஆளுநர் ஒப்புதல் இதுவரை அளிக்காததால் திமுகவினரின் எதிர்பார்ப்புகளை ஸ்டாலினால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதே உண்மை.

சொத்துவரியை உயர்த்தியப்பின்னரும் உள்ளாட்சிகள் நிதியின்றி தள்ளாடுகின்றன. கோடி, லட்சக்கணக்கில் செலவு செய்து உள்ளாட்சிப்பிரதிநிதிகளாக மாறியிருக்கும் திமுகவினருக்கு போட்ட முதலைகூட எடுக்க முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சிகளில்  நடக்கும் சிறு சிறு வளர்ச்சிப்பணிகளில் கூட  அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மூக்கை நுழைப்பதால் உள்ளாட்சி அமைப்புகளில் வென்ற திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் எப்படி சரிசெய்து திமுகவினருக்கு திருப்பி செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தேசிய அளவிலும் தேய்ந்து, குறைந்த பலமே உள்ள காங்கிரசுக்கு எந்த தேர்தல் வந்தாலும் அதன் சக்திக்கு மீறி இடங்கள் வழங்கப்படுவதாக திமுகவினருக்கு மனக்குறை உள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு அதன் பலத்துக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்குவது ஸ்டாலினுக்கு சவால் தான்.

கடந்த பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் கொங்கு மண்டலத்தில் திமுக மொத்தமுள்ள 64 தொகுதிகளில் 42 தொகுதிகளில் தோல்வியையே தழுவியது. கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை வைத்து பல்வேறு அரசியல் நகர்வுகளை செய்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றாலும், இயல்பாகவே தேசிய, ஆன்மிக சிந்தனை கொண்ட வாக்காளர்கள் அதிகம் கொண்ட கொங்கு மண்டலத்தில் திமுகவின் கட்டமைப்பை அப்பகுதியில் பலப்படுத்துவது ஸ்டாலினுக்கு இப்போதும் சவாலாகவே இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் எப்படி ஸ்டாலின் எதிர்கொள்ளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.