கோவையில் மகாத்மா காந்தி நினைவகம் திறப்பு

கோவை போத்தனூரில் மகாத்மா காந்தி நினைவகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நினைவகத்தை காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்துவைத்தார்.

மகாத்மா காந்தியடிகள் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்பதற்காக மூன்று முறை கோவைக்கு வந்துள்ளார். அதன்படி, 1934 ஆம் ஆண்டு கோவை வந்த காந்தியடிகள் போத்தனூரில் உள்ள ஜி.டி.நாயுடுவின் குடும்ப இல்லத்தில் இரண்டு நாள்கள் (பிப்ரவரி 6, 7) தங்கியுள்ளார். தற்போது இந்த இல்லம் ஜி.டி. நாயுடு குழுமம் சார்பில் மகாத்மா காந்தி நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு மகாத்மா காந்திக்கும், கோவைக்கும் உள்ள தொடா்பை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வகையான புகைப்படங்கள், பிறப்பு முதல் இறப்பு வரை அவர் பங்கேற்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவரின் அஹிம்சை கொள்கை, சத்தியம், தர்மம் ஆகியவை குறித்து விவாதிக்கும் வகையில் உரையாடல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜி.டி. குழுமங்களின் நிர்வாக இயக்குனரும் மகாத்மா காந்தி நினைவகத்தின் துணைத் தலைவருமான ஜி.டி. கோபால், இந்த விழாவில் மூன்று பேருக்கு முக்கியமாக நன்றி செலுத்த வேண்டும்; முதலாவதாக எனது தந்தை, அடுத்து, கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் சங்கர் வானவராயர், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியினருக்கும், ஜிடி குழுமத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு செயல்பாடுகளுடன் இதை உருவாக்கியுள்ளனர் எனப் பேசினார்.

விழாவிற்கு கோவை குமரகுரு கல்வி குழுமங்களின் தலைவரும் மகாத்மா காந்தி நினைவகத்தின் தலைவருமான கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையேற்று கூறியதாவது: மகாத்மா காந்தி அகிம்சா முறையில் சுதந்திரம் வாங்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர். 1934 ஆம் ஆண்டில், பிப்ரவரி 6, 7 ல் மகாத்மா காந்தி தங்கியிருந்தார் என்பதை அறிந்துள்ளோம். 85 ஆண்டுகளாக கேட்பரற்று கிடந்த இந்த இடம், புத்துணர்வு பெற்றுள்ளது. இந்த நினைவிடத்தில், குழந்தைகளுடன் வாருங்கள். இங்கு அமர்ந்து மகாத்மா காந்தியை உணர்ந்து தியானம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

விழாவில் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் பேசியதாவது: திருப்பூர் குமரன் பிறந்த மண் இது. சுதந்திரத்துக்கு பின் எவ்வளவோ காரியங்கள் நடந்து விட்டன. நிம்மதி தான் இல்லை. அமைதியை ஏற்படுத்தவே இப்போது இந்த நினைவிடம் உருவாகியுள்ளது. திருப்பூர் குமரன் போன்றே காந்தியும் நம் ரத்தத்தில் ஊறிப்போனவர். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. அதை சீரோடும் சிறப்பாக நிறைவேற்றிட, காந்திய வழியில் தொடருவோம் என தெரிவித்தார்.

மேலும் நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அவிநாசிலிங்கம் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் குழந்தைவேலு அண்ணா, கோயம்புத்தூர், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் சுவாமி நிர்மலே சானந்தா, மகாத்மா காந்தி நினைவகத்தின் பொருளாளர் ஆகிலா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.