கோவையில் புதுமைப் பெண் திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 199 கல்லூரிகளை சேர்ந்த மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு/பட்டயப் படிப்பு/ பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல்இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- மாணவியர்களின் வங்கிக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி நேரடியாக செலுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 199 கல்லூரிகளை சேர்ந்த 3596 மாணவியர்களுக்கு வழங்கும் விதமாக இன்று நடைபெற்ற இவ்விழாவில் 620 மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை மின்சாரத்துறை அமைச்சர் வழங்கினார். மீதமுள்ள மாணவியர்களுக்கு உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.