ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

கேரளா மாநிலம் கொச்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந் உள்நாட்டு விமான தாங்கி போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட கடற்படை கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த போர்க்கப்பலின் சிறப்பு என்ன? 2006 ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வந்த இந்த ஐஎன்எஸ் விக்ராந் விமானம் தாங்கி கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

ரூ.20 ஆயிரம் கோடி செலவில், கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய போர்க்கப்பலில் பல நவீன தானியங்கி அம்சங்கள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்த கப்பலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என 1,700 பேர் இருப்பார்கள். 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுகைகள், சிடி ஸ்கேன் இதில் இடம் பெற்றுள்ளது. இந்திய கடற்படையின் 4 வது விமானம் தாங்கி போர்க்கப்பல் இது.

இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கப்பல்களை விட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் சுமார் 7 மடங்கு பெரியது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டது.

சுமார் 43 ஆயிரம் டன் எடையுடன் 14 அடுக்குகள் கொண்ட இந்த போர்க்கப்பலில் 2,300 அறைகள் உள்ளன. ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் உள்ள கப்பலில் 34 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இருக்கும்.