ஆர்.வி. கல்லூரியில் தமிழ் மன்றத் துவக்க விழா

டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் ‘தமிழ் மன்றத் துவக்கவிழா’ நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

கோவையைச் சேர்ந்த நாவலாசிரியர் ‘முகில்’ தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “எங்கும் கவனம் எதிலும் கவனம்'” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி பேசுகையில்: உலகில் எல்லா மொழிகளிலும் சிறந்த மொழி தமிழ் மொழி. இன்று அறிவியல் கணிப்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்துச் சொன்னவர்கள் தமிழர்களாகிய சித்தர்கள்தான். அத்தகைய தமிழர்களாய் பிறந்ததற்கு பெருமைகொள்ள வேண்டும்.

தெளிவான இலக்கு, சரியான திட்டமிடல், சுய ஆய்வு, தொடர்முயற்சி, கடின உழைப்பு இவையே வெற்றிக்கான சூத்திரங்கள். நம் கவனத்தை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது நம் கையில் உள்ள செல்ஃபோன். அதற்கு அடிமையாகிவிடாமல் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தீயவற்றை விட்டு விட வேண்டும்.

இன்றைய இளைய சமுதாயம் திரைப்படங்களுக்கும், போதைப்பொருள்களுக்கும், குடி போதைக்கும் அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். மாணவர்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

உரையின் இடையே பொது அறிவு கேள்விகளைக் கேட்டு அதற்கு சரியான பதில் கூறிய மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்.